
நாட்டையே உலுக்கிய ஷாரோன் ராஜ் கொலை வழக்கில், காதலி க்ரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது கேரள நீதிமன்றம்.
கன்னியாகுமரியில் வசித்துவந்த இளம்பெண் க்ரீஷ்மா, கடந்த 2021-ல் முதுநிலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தார். அப்போது க்ரீஷ்மாவும், பாரசாலாவைச் சேர்ந்த ஷாரோன் ராஜும் காதலித்து வந்தனர். இதைத் தொடர்ந்து, க்ரீஷ்மாவின் சம்மதத்துடன் 2022-ல் ராணுவ அதிகாரி ஒருவருடன் அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதனை அடுத்து, 2022 அக்.14-ல் ஷாரோன் ராஜை தன் இல்லத்திற்கு அழைத்துள்ளார் க்ரீஷ்மா. அங்கு வைத்து முலீகை விஷங்கள் கலந்த பானம் ஒன்றை, ஆயுர்வேத பானம் என்று கூறி ஷாரோன் ராஜுக்கு அவர் வழங்கியுள்ளார். அதைக் குடித்துவிட்டு தன் இல்லத்திற்குத் திரும்பிய ஷாரோன் ராஜுக்கு பலமுறை வாந்தி எடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஷாரோன் ராஜ் 11 நாட்கள் கழித்து அங்கே உயிரிழந்தார். சாகும் தருவாயில் மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார் ஷாரோன் ராஜ். அதன்பிறகு, க்ரீஷ்மா மீது ஷாரோன் ராஜ் குடும்பத்தனர் காவல்துறையில் புகாரளித்தனர். காவல்துறை விசாரணையில் க்ரீஷமா விஷம் கொடுத்தது உறுதியானது.
இந்த வழக்கு தொடர்பாக ஓராண்டாக சிறையில் இருந்தார் க்ரீஷ்மா. சில காலம் ஜாமின் பெற்று வெளியே இருந்தார். இந்நிலையில் கேரளாவின் நெய்யாட்டின்கரை நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த ஜன.17-ல் க்ரீஷ்மா மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, க்ரீஷ்மாவுக்குத் தூக்கு தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மாமா நிர்மலாகுமரன் நாயருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து இன்று (ஜன.20) தீர்ப்பளித்துள்ளது நெய்யாட்டின்கரை நீதிமன்றம்.