
உ.பி. மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஒரு வாடகை பங்களாவில் இல்லாத நாடுகளின் பெயர்களில் நடத்தப்பட்ட வந்த போலி தூதரகத்தை கண்டுபிடித்த உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப் படை (STF), இதை நடத்தி வந்த ஹர்ஷ் வர்தன் ஜெயின் என்பவரை சம்பவ இடத்தில் வைத்துக் கைது செய்துள்ளது.
மத்திய நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட பங்களாவில் நேற்று (ஜூலை 22) சிறப்புப் படையினர் சோதனை செய்து, ஹர்ஷ் வர்தன் ஜெயினை கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உத்தர பிரதேச சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் இயக்குநர் (ஏடிஜிபி) கூறுகையில், `உத்தர பிரதேச சிறப்பு அதிரடிப் படையின் நொய்டா பிரிவு, சட்டவிரோதமாக காஸியாபாத்தில் இயங்கும் மேற்கு ஆர்க்டிகா போலி தூதரகத்தை கண்டுபிடித்து, அதை நடத்தி வந்த ஹர்ஷ் வர்தன் ஜெயின் என்பவரைக் கைது செய்தது.
அவர் கவிநகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து மேற்கு ஆர்க்டிகா, சபோர்கா, பவுல்வியா, லண்டனியா போன்ற நாடுகளின் தூதர் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, தூதரக பதிவெண் தகடுகளைக்கொண்ட வாகனங்களில் பயணித்து வந்தார்’ என்றார்.
மேலும், `தூதரக பதிவெண் தகடுகளைக்கொண்ட நான்கு வாகனங்கள், இல்லாத நாடுகளின் 12 தூதரக (போலி) பாஸ்போர்ட்டுகள், வெளியுறவு அமைச்சகத்தின் முத்திரையுடன் கூடிய போலியான ஆவணங்கள், இரண்டு போலி பான் கார்டுகள். வெவ்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களின் 34 முத்திரைகள், 2 போலியான பத்திரிகை அடையாள அட்டைகள், ரூ. 44,70,000 ரொக்கம், பல வெளிநாடுகளின் நாணயங்கள், பல நிறுவனங்களின் ஆவணங்கள், ஆகியவை மீட்கப்பட்டுள்ளன’ என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் இருக்கும் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்திய ஜெயின், தன்னை ஒரு அதிகாரம் பொருந்திய தூதராக காட்டிக்கொண்டதாக அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.