
5 ஆண்டுகளுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் பிரியாமல் இருந்தபோது பாஜகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொழிலதிபர் கௌதம் அதானி இடம்பெற்றதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
தி நியூஸ் மினிட் செய்தித் தளத்துக்கு அளித்த பேட்டியில் அஜித் பவார் கூறியதாவது:
"5 ஆண்டுகளுக்கு முன்பு இது நிகழ்ந்தது. சந்திப்புக் கூட்டம் எங்கு நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அனைவரும் அங்கு இருந்தார்கள். மீண்டும் சொல்கிறேன், அமித் ஷா அங்கு இருந்தார். கௌதம் அதானி இருந்தார். பிரஃபுல் படேல் இருந்தார். தேவேந்திர ஃபட்னவீஸ் இருந்தார். அஜித் பவார் இருந்தார். சரத் பவார் இருந்தார். கட்சித் தொண்டனாக சரத் பவார் சொன்னதைதான் அன்று நான் பின்பற்றினேன்" என்றார்.
பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் மஹாராஷ்டிர முதல்வராகவும் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டதற்கு முன்பு நிகழ்ந்த சம்பவத்தை அஜித் பவார் குறிப்பிட்டு பேசியுள்ளார். அப்போது தேசியவாத காங்கிரஸ் இரு பிரிவுகளாகப் பிரியாமல் இருந்தது.
அஜித் பவாருக்கு ஆதரவு கொடுக்க சரத் பவார் மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து, அஜித் பவாரிடம் இருந்த பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் மீண்டும் சரத் பவார் பக்கம் வந்தார்கள். இதைத் தொடர்ந்துதான், பிரிவினை காணாத தேசியவாத காங்கிரஸ் சிவசேனை மற்றும் காங்கிரஸுடன் கைக்கோர்த்தது. அங்கு மஹா விகாஸ் அகாடி ஆட்சி அமைந்தது.
கூட்டணியை உறுதி செய்யக்கூடிய கூட்டத்தில் தொழிலதிபர் கௌதம் அதானி இடம்பெற்றிருந்ததாக இவர் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
சிவசேனை (உத்தவ் தாக்கரே தரப்பு) மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
"அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூத்த அமைச்சர் ஒருவர் டிஜிட்டல் தளத்துக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியதுபடி பார்க்கும்போது, மஹாராஷ்டிரத்தில் பாஜகவை எப்படி ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்பது பற்றிய முடிவை கௌதம் அதானி எடுக்கிறார். சாத்தியமற்ற கூட்டணியை சரி செய்ய முயற்சித்திருக்கிறார். இது சில முக்கியக் கேள்விகளை எழுப்புகிறது.
அவர் பாஜக அங்கீகரிக்கப்பட்ட பேச்சுவார்த்தையாளரா?
கூட்டணியை சரிசெய்யும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா?
ஒரு தொழிலதிபர் ஏன் மகாராஷ்டிரத்தில் பாஜகவை எப்படியாவது ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மிகவும் ஆர்வமாக உழைக்கிறார்?" என்று பதிவிட்டுள்ளார்.