

செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில், சர்ச்சையில் சிக்கிய கல்கோட்டியாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் நேஹா சிங்கின் சமூக ஊடகக் கணக்கு நீக்கப்பட்டுள்ளது கேள்வியை எழுப்பியுள்ளது.
தில்லியில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகமும் பங்கேற்றது. அதன் அரங்கில் வைக்கப்பட்டிருந்த நான்கு கால்கள் கொண்ட 'ஓரியன்’ என்ற ரோபோ நாய் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அது தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அந்தப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் நேஹா சிங், இது தங்கள் பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு என்றும், இதற்கு ரூ. 350 கோடி முதலீடு செய்யப்பட்டது என்றும் பேசினார்.
அம்பலமான உண்மை
நேஹா சிங்கின் பேட்டி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சில மணி நேரங்களிலேயே, தொழில்நுட்ப ஆர்வலர்கள் அந்த ரோபோ நாய் சீனாவின் யுனிட்ரீ ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தின் யுனிட்ரீ கோ2 என்ற ரோபோ நாய் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இந்த ரோபோ நாய் சர்வதேச சந்தையில் ரூ. 2.3 லட்சம் ரூபாய்க்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒரு வணிகத் தயாரிப்பு என்பதும் தெரிய வந்தது.
அரசின் நடவடிக்கை
இந்தியாவின் தொழில்நுட்பத் திறமையை உலகிற்குப் பறைசாற்றும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், ஒரு வெளிநாட்டுத் தயாரிப்பைத் தனது சொந்தக் கண்டுபிடிப்பு எனக் கூறி காட்சிப்படுத்தியது மத்திய அரசுக்குக் கடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அந்த அரங்கின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கல்கோட்டியாஸ் பல்கலைக்கழக நிர்வாகத்தை உடனடியாக மாநாட்டிலிருந்து வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டது.
பல்கலைக்கழகத்தின் விளக்கம்
சர்ச்சை முற்றிய நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் நேஹா சிங் மீது பழியைச் சுமத்தியது. "நேஹா சிங் போதிய தொழில்நுட்பத் தகவல்கள் இன்றி, கேமரா முன் பேசும் ஆர்வத்தில் தவறான தகவலைக் கூறிவிட்டார்" என்று கூறி மன்னிப்பு கோரியது. இருப்பினும், அவர் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதால் அவரைப் பணியிலேயே தொடருமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் பல்கலைக்கழகப் பதிவாளர் நிதின் குமார் கௌர் தெரிவித்தார்.
நேஹா சிங்கின் தற்போதைய நிலை
கடந்த சில நாட்களாக இணையதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொண்டு வரும் நேஹா சிங், தனது சமூக ஊடகப் பக்கமான லின்க்டுஇன் தளத்தில், ’வேலைக்குத் தயார்’ என்ற குறியீட்டைப் பதிவிட்டிருந்தார். பின்னர் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே அவரது பக்கம் முடக்கப்பட்டதுபோல் காட்டப்படுகிறது. நேஹா சிங்கின் லின்க்டுஇன் பக்கத்திற்குச் செல்லும் இணைய இணைப்பைச் சொடுக்கும்போது, "இந்தப் பக்கம் பயன்பாட்டில் இல்லை" என்ற செய்தி திரையில் தோன்றுகிறது. அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டாரா அல்லது அவராகவே விலகினாரா என்ற அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட கடும் இணையத் தாக்குதல்கள் காரணமாகவே அவர் தனது சமூக வலைதளக் கணக்குகளை முடக்கியுள்ளதாகத் தெரிகிறது.
The controversy surrounding a robotic dog showcased at the India AI Impact Summit 2026 has taken a new turn, with Professor Neha Singh’s LinkedIn profile no longer accessible.