
பாரத் ஜோடோ யாத்திரையின்போது இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாகக் கூறப்படும் அவதூறு கருத்துகள் தொடர்பாக லக்ளௌ நீதிமன்றம் அவருக்கு சம்மன் பிறப்பித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த அலஹாபாத் உயர் நீதிமன்றம், அவருக்குக் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
பாரத் ஜோடோ யாத்திரையின்போது கடந்த 2022-ல் ராஜஸ்தானில் ராகுல் காந்தி பேசியதாவது, `பாரத் ஜோடோ யாத்திரை குறித்து பொதுமக்கள் கேட்பார்கள், இங்கேயும் அங்கேயும், அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் மற்றும் இன்னும் என்னவென்று கேட்பார்கள்.
ஆனால், 2000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதியை சீனா கைப்பற்றியது, 20 இந்திய வீரர்களைக் கொன்றது மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் நமது வீரர்களைத் துவம்சம் செய்தது குறித்து அவர்கள் ஒரு கேள்விகூட கேட்கமாட்டார்கள்.
ஆனால் இந்திய பத்திரிகைகள் அவர்களிடம் இவற்றைப் பற்றி ஒரு கேள்வி கூட கேட்பதில்லை. அது உண்மையா இல்லையா? தேசம் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறது. மக்களுக்குத் (இது) தெரியாது என்று பாசாங்கு செய்யவேண்டாம்’ என்றார்.
இதை எதிர்த்து அவர் மீது லக்ளௌ நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கு விசாரணையில் ஆஜராக அவருக்கு லக்னௌ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
சம்மனுக்கும், விசாரணைக்கும் தடை விதிக்கக்கோரி அலஹாபாத் உயர் நீதிமன்றத்தை ராகுல் காந்தி நாடினார். ஆனால் அவரது கோரிக்கைக்கு உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
`சந்தேகத்திற்கு இடமின்றி, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19(1)(a) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது, ஆனால் இந்த சுதந்திரம் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது, இந்திய இராணுவத்திற்கு எதிராக அவதூறு தெரிவிக்கும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம் இதில் உள்ளடங்காது’ என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.