
குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சில நாள்களுக்குப் பிறகு, ஜெகதீப் தன்கர் காணாமல் போயிருக்கலாம் என்று சிவசேனா (உத்தவ்) கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் இன்று (ஆக. 10) தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தன்கர் தொடர்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது குறித்து தங்கள் கட்சி பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சஞ்சய் ராவத் கூறியதாவது,
`ஜூலை 21 அன்று காலையில், நாங்கள் அவரை மாநிலங்களவையில் சந்தித்தோம், அவருடன் ஆலோசனை நடத்தினோம். அவர் மாநிலங்களவையில் சில உத்தரவுகளை பிறப்பித்தார், அதன்பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது. அவர் நல்ல உடல்நிலையில் இருந்தார்.
அவர் உறுப்பினர்கள் மீது கோபமாக இருந்திருக்கலாம், ஆனால் நகைச்சுவையாகவும் பேசினார்… இருப்பினும், மாலை 6 மணிக்குப் பிறகு, ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்,’ என்றார்.
மேலும், `அவர் எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியாது. அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் காணவில்லையா என்பது எங்களுக்குத் தெரியாது... அவர் யாருடன் இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
அவர் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. இந்த நாட்டின் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திடீரென எந்தத் துப்பும் இல்லாமல் காணாமல் போனால், அது நமது ஜனநாயகம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது’ என்று ராவத் கூறினார்.
சிவசேனா (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தில்லிக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அவரை சந்தித்ததாக ராவத் கூறினார்.
`ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து அவரும் (கபில் சிபல்) கேள்வி எழுப்பினார். ஒரு நபர் காணாமல் போனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தாக்கல் செய்யப்படும் ஆட்கொணர்வு மனு பற்றி அவர் எங்களிடம் கூறினார். நீதிமன்றத்தில் அத்தகைய மனுவை தாக்கல் செய்வது குறித்து நாங்கள் யோசித்து வருகிறோம்,’ என்று ராவத் மேலும் கூறினார்.
ஜெகதீப் தன்கர் குறித்து மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் குறிப்பிட்டதாக பிடிஐ ஊடகம் வெளியிட்ட செய்தியில் கூறியதாவது,
`ஜூலை 22 அன்று, நமது துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார், இன்று ஆகஸ்ட் 9, அன்றில் இருந்து அவர் எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இல்லை. முதல் நாளில், நான் அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்தேன், அவரது தனிப்பட்ட செயலாளர் தொலைபேசியை எடுத்து அவர் ஓய்வெடுப்பதாகக் கூறினார்’ என்றார்.
இது தொடர்பாக நேற்று (ஆக. 10) கபில் சிபல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
`குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் (குறித்து) எங்களுக்குத் தெரிவிக்க முடியுமா:
அவர் எங்கே இருக்கிறார்?
அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா?
அவர் ஏன் தொடர்பில் இல்லை?
அமித்ஷா தெரியப்படுத்தவேண்டும்!
அவர் நமது குடியரசுத் துணைத் தலைவர்; நாடு கவலைப்பட வேண்டும்!’ என்றார்.