
1984-ல் தில்லியில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாரை குற்றவாளியாக அறிவித்தது தில்லி ரோஸ் அவின்யூ நிதிமன்றம்.
பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின்பேரில், காலிஸ்தான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த அமிர்தசரஸ் பொற்கோவிலை மீட்க 1984 ஜூனில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் எனும் பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. சில மாதங்கள் கழித்து இரு சீக்கிய மெய்க்காப்பாளர்கள் அக்.31-ல் சுட்டுக்கொல்லப்பட்டார் இந்திரா காந்தி.
இதைத் தொடர்ந்து அப்போது தில்லியில் வசித்து வந்த சீக்கியர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்த நிகழ்வின்போது, புறநகர் தில்லி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாரின் தலைமையில் ஒரு கும்பல், தில்லியின் சரஸ்வதி விஹார் பகுதியில் ஜஸ்வந்த சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங்கைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, சஜ்ஜன் குமார் மீது தொடரப்பட்ட குற்ற வழக்கு மீதான விசாரணை, தில்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு மீதான இறுதி விசாரணை கடந்த டிசம்பரில் நிறைவு பெற்ற நிலையில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணையின்போது அடியோடு மறுத்தார் சஜ்ஜன் குமார்.
இந்நிலையில், இந்த குற்ற வழக்கில் சஜ்ஜன் குமாரை குற்றவாளியாக இன்று (பிப்.12) அறிவித்துள்ளது ரோஸ் அவென்யூ நீதிமன்றம். வன்முறை கும்பலில் ஒரு அங்கமாக இருந்தது மட்டுமல்லாமல், அந்த கும்பலுக்கு சஜ்ஜன் குமார் தலைமை தாங்கியதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இருப்பதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில் தண்டனை பெற்று தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சஜ்ஜன் குமார்.