
தில்லியில் காற்று மாசு பல மடங்கு அதிகரித்துள்ள வேளையில், கோவிட் பெருந்தொற்றைவிட காற்று மாசு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது எனப் பேட்டியளித்துள்ளார் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மரு. ரந்தீப் குலேரியா.
கடந்த சில நாட்களாக தலைநகர் தில்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதிலும் இன்று (அக்.23) காலை முதல் தடித்த புகை மூட்டம் தில்லியில் நிலவி வருகிறது. இதனால் தில்லியில் காற்றின் தரம் மிக மோசம் (354) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காற்று மாசடைவதன் விளைவுகள் குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மரு. ரந்தீப் குலேரியா. அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:
`காற்று மாசால் 2021-ல் உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் மக்கள் மரணமடைந்ததாக சுகாதார விளைவுகள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கோவிட் பெருந்தொற்றில் மரணமடைந்தவர்களை காட்டிலும் அதிகமாகும். கோவிட் குறித்து நாம் கவலை கொள்கிறோம், ஆனால் காற்று மாசு குறித்து நாம் கவலைகொள்வதில்லை.
காற்று மாசுக்குக் காரணமான 2.5 மைக்ரோ மீட்டர் மற்றும் அதற்கும் குறைவான அளவிலான தூசிகளால் இந்தியாவில் அதிக மரணங்கள் ஏற்படுகின்றன. இயல்பாகவே காற்று மாசு நுரையீரல்களில் அழற்சியை ஏற்படுத்தும். இத்தகைய சிறிய அளவிலான தூசிகளால் மூச்சு குழாய் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்பட்டு, அவை மரணங்களில் முடிவடைகின்றன.
ஏற்கனவே இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு, காற்று மாசால் இதய நாளங்களில் வீக்கம் ஏற்பட்டு அதனால் மாரடைப்பு உருவாகும் அபாயம் அதிகம் உள்ளது. 2.5 மைக்ரோ மீட்டர் மற்றும் அதற்கும் குறைவான அளவிலான தூசிகள் ரத்த நாளங்களில் பயணித்து இதயம், நுரையீரல் ஆகியவற்றை தாண்டி உடலின் பல்வேறு பாகங்களுக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் நரம்பியல் பிரச்னைகள், சர்க்கரை நோய், மறதிநோய், வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் உள்ளிட்டவை ஏற்படும்’ என்றார்.