
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது.
உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் கடந்த நவம்பர் 8 2022-ல் பொறுப்பேற்றார். இவருடையப் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதை முன்னிட்டு பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "யாரையாவது காயப்படுத்தியிருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.
"இந்த நீதிமன்றம்தான் என்னை அடுத்தடுத்து நகர உத்வேகம் அளித்தது. நமக்குத் தெரியாத மனிதர்களை நாம் இங்கு சந்திப்போம். ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நீதிமன்றத்தில் யாரையாவது நான் காயப்படுத்தியிருந்தால், தயவுகூர்ந்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். எண்ணிக்கை அளவில் இவ்வளவு பேர் கூடியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
எந்த நேரத்தில் நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம் என நீதிமன்ற ஊழியர் நேற்று என்னிடம் கேட்டார். என்னால் முடிந்தளவுக்கு எத்தனை வழக்குகளை விசாரிக்க முடியுமோ விசாரிக்கிறேன் என்று கூறினேன். முடிந்த வரை கடைசி நிமிடம் வரை நியாயம் சேர்ப்பதற்கான வாய்ப்பைத் தவறவிட வேண்டாம் என விரும்பினேன்.
பிற்பகல் 2 மணியளவில் நீதிமன்றம் யாரும் இல்லாமல் நான் மட்டுமே இருக்கும் வகையில் காலியாக இருக்கக்கூடும் என நேற்றிரவு நினைத்துப் பார்த்தேன். இவ்வளவு பேர் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாம் வெறும் யாத்திரை மேற்கொள்பவர்கள், பறவைகள் மட்டும்தான். குறுகிய காலத்தில் நம் பணியைச் செய்துவிட்டு விலகிவிட வேண்டும்" என்றார் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.
புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா நிலையானவர், திடமானவர் எனக் குறிப்பிட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசினார்.