தன் மகளின் உடலை விரைவாகத் தகனம் செய்ய காவல்துறையினரால் வற்புறுத்தப்பட்டதாக, கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று (செப்.09) ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெளியே நடந்த போராட்டத்தில் பேசிய கொலையான பெண் பயிற்சி மருத்துவரின் தந்தை, `எங்கள் இல்லத்தைச் சுற்றித் தோராயமாக 300 முதல் 400 வரையிலான காவலர்கள் குவிக்கப்பட்டனர். மகளின் உடலுக்கு சில சடங்குகளைச் செய்ய நாங்கள் முடிவெடுத்திருந்தோம். ஆனால் எங்கள் மீது இருந்த கடுமையான அழுத்தத்தால் மகளின் உடலை விரைவாகத் தகனம் செய்தோம்’ என்றார்.
கொல்கத்தா நகர காவல்துறை மீது பெண் பயிற்சி மருத்தவரின் தந்தை முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சில நேரத்திலேயே, பெண் பயிற்சி மருத்தவரின் பெற்றோர் பேசும் ஒரு காணொளியை வெளியிட்டது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி.
அந்த காணொளியில், `போராட்டத்தில் நாங்கள் அவ்வாறு எதையுமே பேசவில்லை. எங்களுக்குத் தேவை நீதி மட்டுமே. எங்களிடம் பேசுபவர்கள் அனைவருமே எங்களுக்கு நீதி கிடைக்க உதவுவதாகவே தெரிவிக்கின்றனர்’ என்று கொலையான பெண் மருத்துவரின் பெற்றோர் பேசியுள்ளனர்.
இந்தக் காணொளியைக் காண்பித்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரும், மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சருமான ஷஷி பஞ்சா, `அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமும், இதைத்தான் பேச வேண்டும் என்று எந்த ஒரு அரசியல் கட்சியும் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. இதற்குப் பின்னால் பாஜக இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். இது இறந்தவருக்குச் செய்யப்படும் அவமரியாதை’ என்றார்.