
அந்தமானைச் சேர்ந்த ஜராவா பழங்குடியின மக்கள் முதல்முறையாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
அந்தமான் – நிகோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள தெற்கு அந்தமான் மற்றும் மத்திய அந்தமான் தீவுகளில் ஜராவா பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பழங்குடியின மக்கள் நாடோடி வாழ்க்கையைக் கடைபிடிப்பதுடன், வெளிப்புற தொடர்புகளில் இருந்து பெரும்பாலும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் முதல்முறையாக ஜராவா பழங்குடியினத்தைச் சேர்ந்த 19 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை அந்தமான்-நிகோபார் தலைமைச் செயலாளர் சந்திர பூஷண் குமார், சமீபத்தில் வழங்கியதாகத் தெற்கு அந்தமான் மாவட்ட தேர்தல் அலுவலர் அர்ஜுன் சர்மா பிடிஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அவர் பேசியவை பின்வருமாறு,
`அந்தமான்-நிகோபார் நிர்வாகத்தின் கடுமையான உழைப்பால் இது சாத்தியமாகியுள்ளது. அம்மக்களின் அன்றாட வாழ்வில் தலையீடு குறைவாக இருக்கும் வகையிலும், அவர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும் வகையிலும் இந்த வாக்காளர் சேர்க்கை முறை வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
அந்தமான்-நிகோபார் நிர்வாகத்துடனான ஜராவா பழங்குடியின மக்களின் தொடர்பு முதல்முறையாக ஏப்ரல் 1996-ல் ஏற்பட்டது. அந்த சமயம் ஜராவா கூட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் `என்மெய்’ என்பவருக்கு இடது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அர்சு நிர்வாகம் சார்பில் அவருக்குத் தகுந்த சிகிச்சை வழங்கப்பட்டது.
என்மெய் பூரணமாகக் குணமடைந்ததும் அவரது குடியிருப்புப் பகுதியில் அவர் பத்திரமாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்தமான் நிர்வாகத்திற்கும், ஜராவாக்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையும் உருவாகக் காரணமாக இருந்துள்ளது.