ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அம்மாநிலத்தில் இன்று (நவ.9) கடல் விமான சேவையின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கிவைத்து, அதில் பயணித்தார்.
இன்று காலை ஆந்திராவின் விஜயவாடாவில், இந்தியாவிலேயே முதல்முறையாக கடல் விமான சேவையின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
அதனைத் தொடர்ந்து, விஜயவாடாவின் புன்னமி படித்துறையில் இருந்து ஸ்ரீசைலம் வரை கடல் விமானத்தில் அவர் பயணித்தார். இந்த கடல் விமானம் கனடா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு மற்றும் அரசு அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சந்திரப்பாபு நாயுடு பேசியதாவது,
`இது சுற்றுலாவின் ஏற்றத்துக்கான வாய்ப்பு. வருங்காலம் என்பது சுற்றுலா மட்டுமே. வேலைவாய்ப்புகள், வருமானம், உற்சாகம், மக்களுக்கான புதிய அனுபவங்கள் ஆகியவை உருவாகும். இதனால் கடல் விமானங்கள் மீது மட்டும் கவனம் செலுத்த நான் விரும்பவில்லை. சுற்றுலாவுக்குத் தொழில்துறை அங்கீகாரம் கொடுக்க உள்ளோம்.
கடல் விமான பயணம் என்பது ஒரு புதுமையான சுற்றுலாவுக்கான வாய்ப்பாகும். மாநிலத்தில் ஏற்படும் வளர்ச்சி என்பது வருமானத்தை அதிகரிக்கவேண்டும். தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது, அதன் ஆற்றலை முழுமையாக நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஐ.டி. தொடங்கிய புதிதில் அதன் வளர்ச்சி மீது சந்தேகம் இருந்தது. தற்போது எங்கள் (தெலுங்கு) மக்கள் உலக அளவில் அதில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். வெகு விரைவில் விமான சேவைகளுக்குத் துணையாக, மேம்படுத்தபட்ட இணைப்பை கடல் விமானங்கள் வழங்கும்’ என்றார்.