
பெங்களூரு வாழ் மக்களும், பயணிகளும் அந்நகரத்தின் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கும் வகையில், தனியார் விமான போக்குவரத்து நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்ஸி திட்டத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிர்வாகத்துடன் கைகோர்த்துள்ள சர்லா ஏவியேஷன் எனும் தனியார் விமான போக்குவரத்து நிறுவனம், ஹெலிகாப்டர்களைப் போல செங்குத்தான வகையில் புறப்பட்டுச் செல்லும் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்ஸிகளை பெங்களூரு நகரத்தில் இயக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த மின்சார பறக்கும் டாக்ஸிகளால் பயண நேரம் பெருமளவில் குறையும். அதே நேரம் மின்சாரத்தில் இயங்குவதால் இவற்றால் எந்த ஒரு காற்று மாசுபாடும் ஏற்படாது. பெங்களூரு போன்ற போக்குவரத்து நெரிசலில் மிக்க பெரு நகரங்களில் இத்தகைய மின்சார டாக்ஸிகளின் பயன்பாடு மிகவும் உபயோகமான போக்குவரத்தாக இருக்கும்.
ஏழு இருக்கைகள் கொண்ட வகையில் இந்த மின்சார பறக்கும் டாக்ஸிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவின் எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி இடையே இந்த சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த 52 கி.மீ. பயண தூரத்தை பறக்கும் டாக்ஸிகளால் வெறும் 19 நிமிடங்களில் கடக்க முடியும். இதற்கான கட்டணமாக ரூ. 1700 வசூலிக்கப்படும் என தெரிகிறது.
இந்த திட்டம் மூன்று ஆண்டுகளில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெங்களூரு மட்டுமில்லாமல், இந்தியாவின் நெருக்கடியான பெரு நகரங்களான மும்பை, டெல்லி, புனே ஆகியவற்றிலும் இந்தச் சேவையை விரைவில் தொடங்க சர்லா ஏவியேஷன் திட்டமிட்டுள்ளது.