
ரேஷன் பொருட்களை இலவசமாக தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பதைவிட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தவேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை பார்க்கும் மாநிலங்களில் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பான வழக்கு மீது நேற்று (டிச.10) விசாரணை நடத்தியது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கு தொடர்பாக முன்பு நடைபெற்ற விசாரணையில், தகுதியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு 19 நவம்பர் 2024-க்குள் ரேஷன் அட்டைகளை வழங்கக்கோரி உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, `தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 80 கோடி ஏழை மக்களுக்கு கோதுமை, அரிசி உள்ளிட்ட இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன’ என்றார். இதை எதிர்த்து வாதிட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், `இருந்தும் இந்த திட்டத்தில் இருந்து 2 முதல் 3 கோடி மக்கள் வரை விடுபட்டுள்ளனர்’ என்றார்.
இதை தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், `இதைப் போல மிகப்பெரும் அளவில் ரேஷன் பொருட்களை வழங்கும் நடைமுறை தொடரும்போது, இந்த விவாகாரத்தில் நிதி சுமை மத்திய அரசு மீது உள்ளதால், மக்களைக் கவரும் வகையில் மாநில அரசுகள் தொடர்ந்து ரேஷன் அட்டைகளை விநியோகிக்கும்.
அதேநேரம் மாநில அரசுகளை இலவச ரேஷன் வழங்க நிர்பந்தித்தால், நிதி சுமையை காரணம் காட்டி அவர்கள் வழங்கமாட்டார்கள். எனவே வேலைவாய்ப்பு உருவாக்குவதில் அதிக கவனத்தை மத்திய அரசு செலுத்தவேண்டும்’ என்றார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் ஜனவரி 8, 2025-க்கு ஒத்திவைக்கப்பட்டது.