வரி செலுத்துவோரிடம் எளிய அணுகுமுறை தேவை: அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல் | Nirmala Sithamaran |

இது வரி செலுத்துபவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும்...
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)ANI
2 min read

வரி செலுத்துபவர்களிடம் எளிமையாகவும் சுமூகமாகவும் அணுக வேண்டும். அவர்கள் உங்கள் எதிரி அல்ல. நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பங்குதாரர்கள் என்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை வழங்கினார்.

2026-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், வருமான வரிச் சட்டத்தில் பல திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் வரி விதிப்பு முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, வருமான வரிச்சட்டம் 1961-க்குப் பதிலாக வருமான வரிச் சட்டம் 2025 கொண்டு வரப்பட உள்ளது. இவை வரி செலுத்துவோருக்கான விதிமுறை எளிமைப்படுத்துவதையும், நடைமுறைச் சிக்கல்களை தீர்ப்பதாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதிகாரிகளுக்கு அறிவுரை

இதைத் தொடர்ந்து புதிய வருமான வரிச் சட்டம் குறித்த விழிப்புணர்வை வழங்கும் வகையில் மத்திய அரசு பிராரம்ப் என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதனைத் தொடங்கி வைத்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறை அதிகாரிகள் வரி செலுத்துவோரிடம் சுமூகமான வகையில் உரையாட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

வரி செலுத்துபவர் எதிரி அல்ல

நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது

”வரி செலுத்துபவரின் வாழ்க்கையை எளிதாக்குவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதை ஒவ்வொரு அதிகாரியும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். உங்கள் அமைப்புடன் தொடர்பு கொள்ளும் வரி செலுத்துபவர் உங்கள் எதிரி அல்ல. அவர் நாட்டைக் கட்டமைப்பதில் உங்களுக்குப் பங்குதாரர். அரசு வருமான வரிச்சட்டம் 2025-ஐ அமல்படுத்தத் தொடங்கும் இந்த நேரத்தில் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இந்தப் புதிய சட்டம் நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் குறைப்பது, மொழியை எளிமையாக்குவது மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வருமான வரித்துறையின் ‘தங்கத் தரம்’

வருமான வரித்துறை இந்தப் புதிய சட்டத்தின் தெளிவைப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கும், தேவையற்ற வழக்குகளைத் தவிர்ப்பதற்கும் முயல வேண்டும். தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லும் ஒவ்வொரு வழக்கும் அமைப்பின் தோல்வியே ஆகும். சுமூகமான, இடையூறில்லாத முறை இருக்க வேண்டும். அதில் வரி செலுத்துபவர் வரி அறிக்கையைத் தாக்கல் செய்து, உடனடியாக தொகையைத் திரும்பப் பெற்று, அதற்கு மேல் துறையுடன் எவ்வித தொடர்பும் கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் இருக்க வேண்டும். இதுவே நாம் நோக்க வேண்டிய தங்கத் தரம் ஆகும்.

விழிப்புணர்வை வழங்க வேண்டும்

புதிய வரி முறை நெறிமுறை மற்றும் ஒழுக்கக் கோட்பாடுகளில் அடித்தளமாக இருக்க வேண்டும். சிக்கல்களுக்கு பதிலாக தெளிவு வர வேண்டும். வெளிப்படையான, விதி சார்ந்த கண்காணிப்பு மூலம் பொறுப்பான ஆளுமையை உருவாக்க வேண்டும். இது வரி செலுத்துபவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும். வரி அதிகாரிகளின் பொறுப்பில் நாட்டின் மிகத் தொலைதூர பகுதிகள் வரை சென்று, ஒவ்வொரு மாவட்டம் மற்றும் தாலுகாவிலும் உள்ள சிறு வணிகங்கள் மற்றும் தனிநபர் வரி செலுத்துபவர்கள் கூட புதிய சட்டத்தின் பலன்களைப் பெறுவதை உறுதி செய்வதும் அடங்கும்” என்றார்.

Summary

Union Finance Minister Nirmala Sitharaman has advised the Income Tax Department officials to approach taxpayers in a simple and smooth manner. They are not your enemy. They are partners in improving the country's infrastructure.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in