உருவாகும் தென்னிந்தியப் பொருளாதாரக் கூட்டமைப்பு: நிதி ஒதுக்கீடு குறித்து நிதியமைச்சர் விளக்கம்

தென்னிந்திய மாநிலங்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய பொருளாதார கூட்டமைப்பை உருவாக்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உருவாகும் தென்னிந்தியப் பொருளாதாரக் கூட்டமைப்பு: நிதி ஒதுக்கீடு குறித்து நிதியமைச்சர் விளக்கம்
ANI

மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு விஷயத்தில் தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், மத்திய அரசைக் கண்டித்து தென்னிந்திய மாநில அரசுகளை ஒருங்கிணைத்து தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் நிதிப் பங்கீட்டில் தென்னிந்திய மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகக் கடந்த 5 ஆண்டுகளாகவே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய மாநிலங்களை ஒருங்கிணைத்து பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.

வரும் 7-ம் தேதி மத்திய அரசைக் கண்டித்து கர்நாடகம் சார்பில் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. மறுநாள் திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் கருப்புச் சட்டை அணியும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் கேரள அரசின் சார்பில் தில்லியில் ஆர்ப்பாட்டமும் நடைபெறவிருக்கிறது. மாநில உரிமைகளுக்கான போராட்டம் என்பதால் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தென்னிந்திய எம்.பி.க்களும், கட்சிப் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு புதிய பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்கும் பணிகளை முன்னெடுத்திருப்பதாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி தெரிவித்துள்ளார். தென்னிந்திய மாநிலங்களின் குரல் தொடர்ந்து மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்வதற்காக ஒரு அமைப்பை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது நிதிக் குழு தான் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி அதிர் ரஞ்சன் சௌதரிக்கு மறுப்பு தெரிவித்த மத்திய நிதியமைச்சர், அனைத்து மாநிலங்களுக்கும் நிதிக் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதாவும், நிதிக் குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே தான் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in