
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கு இருக்கும் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பிரம்மபுத்திராவின் கிளை நதியான கோப்பிலி நதியில் அபாய கட்டத்தையும் தாண்டி வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது.
ரெமால் புயலின் தாக்கமும், இந்த வருடப் பருவ மழையும், அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட மிக முக்கியக் காரணிகளாக உள்ளன. ஜூன் 20 வரை வடகிழக்கின் அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்தியாவில் ஓவ்வொரு வருடமும் ஜூன் – ஜூலை மாதங்களில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழைக்காலத்தில் அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாமல் பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்திருக்கும் காஸிரங்கா, தீப்ரூ சைக்கோவா போன்ற தேசிய பூங்காக்களில் இருக்கும் வனவிலங்குகளும் இந்த வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகும்.
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அஸ்ஸாமின் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கரீம்கஞ்ச் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் அரசின் அறிக்கைப்படி, ஏறத்தாழ 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்தக் கனமழையால் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் 1000 ஹெக்டேர் அளவுக்கான விவசாய நிலங்கள் சேசமடைந்துள்ளன.