
தில்லியில் உள்ள கரோல்பாக் மற்றும் அதை ஒட்டி உள்ள பழைய ராஜேந்தர் நகர் பகுதிகளில் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி வழங்கும் பல தனியார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கு உள்ள பயிற்சி மையம் ஒன்றின் கீழ் தளத்தில் நேற்று (ஜூலை 27) வெள்ள நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கரோல்பாக், பழைய ராஜேந்தர் நகர் பகுதிகளில் உள்ள பல கட்டடங்களில், கீழ் தளங்கள் (basement) படிப்பகங்களாகச் செயல்பட்டு வருகின்றன. சில தனியார் பயிற்சி மையங்களின் கீழ் தளங்களும் படிப்பகங்களாகச் செயல்படுகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை தில்லியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பழைய ராஜேந்தர் நகர் பகுதியில் இருக்கும் ராவ்ஸ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கீழ் தளத்தில் திடீரென்று வெள்ள நீர் புகுந்தது. இந்த வெள்ள நீரில் சிக்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இருவர் பெண்கள்.
மாணவர்கள் இறந்த சம்பவத்தைக் முன்வைத்து, இன்று காலை (ஜூலை 28) முதல் தில்லி மாநகராட்சியையும், தனியார் பயிற்சி மையத்தையும் கண்டித்து அகில இந்திய குடிமைப்பணி தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்கள் போராட்டம் அங்கு நடத்தி வருகின்றனர்.
`கட்டடங்களின் கீழ் தளங்களில் சட்டவிரோதமாகவே படிப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இது போன்ற அவசர காலங்களில் உள்ளிருப்பவர்கள் உடனடியாகத் தப்பித்து வெளியே வர தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் பயிற்சி மையம் மேற்கொள்ளவில்லை. இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு தில்லி அமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த அறிக்கையை 24 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இதற்குக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.