எத்தியோப்பிய எரிமலை வெடிப்பு: இந்தியாவில் விமானப் போக்குவரத்து பாதிப்பு | Hayli Gubbi |

சாம்பல் மேகங்களில் உள்ள சல்ஃபர் டை ஆக்சைடு மற்றும் சிறிய பாறைத் துகள்கள் வளிமண்டலம் வரை பரவியுள்ளது....
எத்தியோப்பிய எரிமலை வெடிப்பு: விமானப் போக்குவரத்து பாதிப்பு
எத்தியோப்பிய எரிமலை வெடிப்பு: விமானப் போக்குவரத்து பாதிப்பு
1 min read

எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி என்ற எரிமலை 10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்த நிலையில் சாம்பல் மேகங்கள் காரணமாக இந்தியாவில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் அபார் மாகாணத்தில் ஹேலி குப்பி என்ற எரிமலை உள்ளது. கடந்த 10,000 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை, நேற்று (நவ.25) திடீரென்று வெடிக்கத் தொடங்கியது. இதனால், பல கிலோ மீட்டர் உயரத்துக்கு கரும்புகைகள் எழுந்த நிலையில், எரிமலைக் குழம்பும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களை அந்நாட்டு அரசு பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது.

ஹேலி குப்பி எரிமலை வெடிப்பால் உருவான சாம்பல் மேகங்கள், இந்திய வான் பரப்பை அடைந்தன. குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா வழியாக தில்லி வரை சாம்பல் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதனால், தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்து மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், சாம்பல் மேகங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு மற்றும் சிறிய பாறைத் துகள்கள் ஆகியவை 10 - 15 கிலோ மீட்டர் உயரத்திற்கு வளிமண்டலம் வரை பரவியுள்ளது. மேலும், இவை மணிக்கு 100 - 120 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் தில்லி வான் பரப்புகளில் சாம்பல் மேகக் கூட்டங்கள் சூழ்ந்துள்ள நிலையில், விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் விமானிகளுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரிவான அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதில், “விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். விமான என்ஜின்களை பாதிக்கக்கூடிய துகள்கள் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். என்ஜினில் வழக்கத்துக்கு மாறாக ஏதேனும் அறியப்பட்டால் உடனடியாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்க வேண்டும். விமான நிலைய ஓடுபாதைகளில் சாம்பல் மேகங்களின் துகள்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அதனை சுத்தம் செய்து, பாதுகாப்பை உறுதி செய்யும்வரை விமானங்களை இயக்கக் கூடாது” என்று விமானிகளுக்கும் விமான நிலைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பியாவுக்கான வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் 11 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. அதேபோல், இண்டிகோ, ஆகாசா ஏர், கேஎல்எம் ஆகிய நிறுவனங்களும் தங்கள் விமான சேவை அட்டவணையை மாறியமைத்துள்ளன. சாம்பல் மேகங்கள் சூழ்ந்த பகுதிகளை தவிர்த்து, மாற்றுப் பாதையில் விமானங்களை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Summary

Flight services in India have been disrupted due to ash clouds as Ethiopia's Hayli Gubbi volcano erupted for the first time in 10,000 years.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in