உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளி பெரிய அளவில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் அப்பள்ளியில் படிக்கும் 2-ம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்துள்ளனர்.
உ.பி.யின் ஹத்ராஸ் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் டி.எல். பப்ளிக் ஸ்கூல் என்று அறியப்படும் அந்தப் தனியார் பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த செப்.23-ல் அப்பள்ளியில் படிக்கும் 2-ம் வகுப்பு மாணவன் விடுதியில் மயங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்த சக மாணவர்கள் விடுதிக் காப்பாளருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதை அடுத்து மாணவனின் தந்தையை தொலைபேசியில் அழைத்து, அவரது மகன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறான் என்று கூறி அவரை பள்ளிக்கு அழைத்துள்ளனர். மாணவனின் பெற்றோர் பள்ளிக்குச் சென்றபோது, பள்ளி உரிமையாளரின் காரில் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனே மாணவனை அழைத்துச் சென்ற காரைப் பின்தொடர்ந்து சென்று பார்த்ததில், மாணவன் இறந்துபோனது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறை நடத்திய விசாரணையில், பள்ளி உரிமையாளர் ஜஷோதன் சிங், அவரது மகனும் பள்ளி இயக்குநருமான தினேஷ் பாகல், பள்ளியின் தலைமை ஆசிரியர் லக்ஷ்மண் சிங், ஆசிரியர்கள் வீர்பால் சிங் மற்றும் ராம்பிரகாஷ் சோலன்கி ஆகியோர் இணைந்து பள்ளி விடுதியில் தங்கியிருந்த 2-ம் வகுப்பு மாணவனைக் கொலை செய்தது தெரியவந்தது.
ஜஷோதன் சிங் பில்லி சூனியத்தில் கொண்ட நம்பிக்கையால், பள்ளியின் வளர்ச்சிக்காகவும் புகழுக்காகவும் பள்ளியின் இயக்குநரான தன் மகன் தினேஷ் பாகலுடன் இணைந்து இந்தக் கொலையில் ஈடுபட்டுள்ளார். காவல்துறையால் கைது செய்யப்பட்ட இந்த ஐந்து நபர்கள் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா 103 (1) பிரிவின் கீழ் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.