
அஹமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த விஸ்வாஸ் குமார் என்ற பயணி காயத்துடன் உயிர் பிழைத்துள்ளார்.
இன்று (ஜூன் 12) மதியம் அஹமதாபாத்தில் நடந்த விமான விபத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஹமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக், `விமானத்தில் இருந்த யாராவது உயிர் பிழைத்திருப்பார்களா என்று சொல்வது மிகவும் கடினம்’ என்றார்.
ஆனால் இது நடந்த சில மணிநேரத்திற்குள், `(விமானத்தின்) 11A இருக்கையில் இருந்தவர் உயிர் பிழைத்திருப்பதைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்’ என்று விமான விபத்தில் இருந்து உயிர் தப்பிய நபர் குறித்து காவல் ஆணையர் மாலிக் தங்களிடம் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, உயிர் தப்பிய அந்த பயணியின் பிரிட்டனைச் சேர்ந்த விஸ்வாஷ் குமார் ரமேஷ் (40) என்ற செய்தி வெளியானது.
மேலும், விபத்து நடந்த இடத்தில் இருந்து காலில் ஏற்பட்ட காயத்துடன் நொண்டியபடி நடந்து, விஸ்வாஷ் குமார் ரமேஷ் ஆம்புலன்ஸில் ஏறுவதைக் காண்பிக்கும், கைபேசியில் எடுக்கப்பட்ட ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிப்பட்ட விஸ்வாஷ் குமாரை சந்தித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நலம் விசாரித்து, விமான விபத்து குறித்து கேட்டறிந்தார்.