
புதிதாக அமைந்துள்ள 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ல் தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூ தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மாநிலங்களவையின் கூட்டத்தொடர் ஜூன் 27-ல் தொடங்கி, ஜூலை 3 வரை நடைபெறும் என அந்தப் பதிவில் தகவல்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜூன் 27-ல் உரையாற்றுகிறார் எனவும் அமைச்சர் கிரண் ரிஜிஜூ தன் பதிவில் தகவல்.
ஜூன் 24-ல் கூடும் மக்களவையில் புதிதாகத் தேர்வாகியுள்ள எம்.பி.களுக்கு இடைக்கால சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். இதனைத் தொடர்ந்து மக்களவையின் புதிய சபாநாயகரை எம்.பி.க்கள் தேர்ந்தெடுப்பார்கள். ஜூலையில், 2024-2025 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை, 7 கட்டங்களாக 18வது மக்களவை எம்.பி.க்களை தேர்தெடுக்க நாடு முழுவதும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஜூன் 4-ல் வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஜூன் 9-ல் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த 17வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் ஜனவரி 31 தொடங்கி, பிப்ரவரி 10 வரை நடைபெற்றது.