
Liquor Investors Summit UP: மதுபானத் தொழிலுக்கான முதல் முதலீட்டாளர் உச்சி மாநாட்டை உத்தர பிரதேச மாநில கலால் துறை நேற்று (ஜூலை 9) நடத்தியது. இதன் மூலம் ரூ. 4,320 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அம்மாநில அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்த உச்சி மாநாடு தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் உ.பி. மாநில அதிகாரி ஒருவர் கூறியதாவது,
`மாநிலத்தில் மதுபான உற்பத்தி, விநியோகம், சந்தைப்படுத்தல் சார்ந்த தொழில்கள் மற்றும் இவை சார்ந்த துறைகளில் முதலீட்டை ஊக்குவித்தல்; மதுபானம் தொடர்புடைய தொழில்களுக்கு சுமூகமான சூழலை ஏற்படுத்துதல் மற்றும் முதலீட்டாளர்களுக்கு கொள்கை தொடர்பான தகவல்களை வழங்குதல், ஆகியவற்றை இந்த ஒரு நாள் மாநாடு நோக்கமாகக் கொண்டது’ என்றனர்.
`சேவைத் துறைக்கு உத்தர பிரதேசம் நீண்ட காலமாக பெயர் பெற்றிருந்தாலும், தற்போது ஒரு உற்பத்தி மையமாக அம்மாநிலம் வளர்ந்து வருவதாக’ உ.பி. கலால் அமைச்சர் நிதின் அகர்வால் குறிப்பிட்டார்.
மேலும், `சமீபத்திய ஆண்டுகளில், மது சார்ந்த தொழில்களுக்கான 142 முதலீட்டு திட்டங்கள் இன்வெஸ்ட் அப் இணையதளம் மூலம் வந்துள்ளன, இதன் மூலம் 73,524 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ரூ. 39,479 கோடி மதிப்புள்ள 135 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகியுள்ளன’ என்றும் அமைச்சர் கூறினார்.
இந்திய சர்வதேச மதுபானங்கள் மற்றும் ஒயின்கள் சங்கத்தால் வெளியிடப்பட்ட உத்தர பிரதேச மாநிலத்தின் மதுபானத் தொழில் குறித்த பொருளாதார அறிக்கையில், `2023-24 நிதியாண்டில் இந்த துறை ரூ. 56,000 கோடி சந்தை வருவாயை ஈட்டியது, இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 2.4% பங்களிப்பை வழங்கியது’ என்று கூறப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச அரசால், கடந்த ஏப்ரல் 1 அன்று புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.