முதலில் சந்திரபாபு நாயுடு, தற்போது ஸ்டாலின்: மக்கள்தொகை குறித்து பேசியது ஏன்?

வரிப் பகிர்வின் மூலம் மாநிலங்களுக்கு இடையே நிதி ஒதுக்குவதில் மக்கள்தொகையை ஒரு அளவுகோலாக பயன்படுத்தி வருகிறது 15-வது மத்திய நிதிக்குழு.
முதலில் சந்திரபாபு நாயுடு, தற்போது ஸ்டாலின்: மக்கள்தொகை குறித்து பேசியது ஏன்?
ANI
2 min read

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் அடுத்தடுத்து மக்கள்தொகை குறித்து பேசியுள்ளது வடக்கு மற்றும் தென் இந்தியாவுக்கு இடையிலான மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு குறித்த விவாதத்தை தேசிய அளவில் மீண்டும் கிளப்பியுள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள ஆண்களும், பெண்களும் ஆந்திராவின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூனில் சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவி ஏற்ற பிறகு இந்தத் தடை நீக்கப்பட்டது.

கடந்த அக்.19-ல் இது தொடர்பாக பேசிய சந்திரபாபு நாயுடு, `அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஆந்திர மக்களை ஊக்குவிப்பதற்கு திட்டமிட்டு வருகிறோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதற்கு அமலில் இருந்த தடையை நீக்கியுள்ளோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வகையிலான சட்டத்தை விரைவில் கொண்டுவர உள்ளோம்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து இன்று (அக்.21) காலை சென்னை திருவான்மியூரில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், `16 செல்வங்களை பெற்று வாழுமாறு முன்பு வாழ்த்தினார்கள். இப்போது 16 செல்வங்களை பெற்று வாழுமாறு யாரும் வாழ்த்துவதில்லை. அளவோடு பெற்று வளமோடு வாழ்க என்றே கூறுகிறோம். ஆனால் இன்றைக்கு நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் என்ற நிலை வரும்போது, ஏன் அளவோடு பெற்று வளமோடு வாழவேண்டும்? நாமும் பதினாறு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை வந்துள்ளது’ என்றார்.

தற்போது இந்தியாவிலுள்ள மக்கள்தொகையின் அடிப்படையில், வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளது.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்திய அளவில் மக்கள் தொகையில் முன்னணியில் உள்ள உத்தர பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களுக்கு தற்போது இருப்பதைவிட அதிக மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை கிடைக்கும்.

அதை ஒப்பிடும்போது மக்கள் தொகையில் குறைவாக உள்ள வளர்ச்சியடைந்த 5 தென் மாநிலங்களுக்கும் குறைவான எண்ணிக்கையிலான மக்களவை உறுப்பினர்களே கிடைப்பார்கள். சொல்லப்போனால், புதிய மக்கள்தொகை அடிப்படையில் தற்போது இருப்பதைவிட கர்நாடக மாநிலத்துக்கு குறைவான எண்ணிக்கையிலான மக்களவை உறுப்பினர்களே கிடைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

1970 மற்றும் 1980-களில் இந்திய அரசு கொண்டு வந்த மக்கள்தொகை குறைப்பு நடவடிக்கைகளை தென் மாநிலங்கள் பின்பற்றின. இதனால் தென் மாநிலங்களின் கருவுறுதல் விகிதம் குறைந்தது. ஆனால் வட மாநிலங்களில் இத்தகைய நடவடிக்கைகள் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்படாததால் அம்மாநிலங்களின் மக்கள்தொகை சீரான முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது.

மேலும் மத்திய-மாநில நிதி பங்கீட்டிலும் மக்கள்தொகை முக்கிய இடத்தை வகிக்கிறது. உதாரணத்துக்கு வரிப் பங்கீட்டில் மாநிலங்களுக்கு இடையே நிதி ஒதுக்குவதில் மக்கள்தொகையை ஒரு அளவுகோலாக பயன்படுத்தி வருகிறது 15-வது மத்திய நிதிக்குழு.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலத்துக்கு ரூ. 31,962 கோடி வரி பகிர்வு முன்பணமாக மத்திய அரசால் வழங்கப்பட்டது. அதே நேரம் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா என 5 தென் மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ. 28,152 கோடி மட்டுமே வரி பகிர்வு முன்பணமாக வழங்கப்பட்டது.

இதற்கும் தற்போது 2011 மக்கள்தொகை கணக்கீட்டின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுகிறது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள புதிய மக்கள்தொகை கணக்கீட்டின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும் பட்சத்தில் தென் மாநிலங்களுக்கு மேலும் பாதிப்பு உருவாகும்.

இதனால் முதல்வர்கள் சந்திரபாபு நாயுடுவும், ஸ்டாலினும் மக்கள்தொகை குறித்து பேசியுள்ளது அதிக கவனம்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in