
கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவ இலக்குகள் மீது இந்திய விமானப்படை 50-க்கும் குறைவான ஆயுதங்களை பயன்படுத்தியதால் மட்டுமே, ராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர கோரிக்கை வைக்க வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டதாக இந்தியா விமானப்படைத் துணைத் தளபதி நர்மதேஷ்வர் திவாரி இன்று (ஆக. 30) பேசியுள்ளார்.
கடந்த மே 9 மற்றும் 10-ம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட எதிர் தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது இந்திய விமானப்படையால் முழுமையான ஆதிக்கத்தை செலுத்த முடிந்தது என்று நர்மதேஷ்வர் திவாரி கூறினார்.
`50-க்கும் குறைவான ஆயுதங்களில், முழுமையான ஆதிக்கத்தை அடைய முடிந்தது என்பது எங்களுக்கு ஒரு முக்கிய அறிகுறி என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டும். இதற்கு முன்பு இது நடந்ததில்லை’ என்று என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் திவாரி கூறினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கியப் பங்கு வகித்த இந்திய விமானப்படை அதிகாரியான திவாரி, இந்த நடவடிக்கையின்போது குறிவைத்துத் தாக்கப்பட்ட சில பாகிஸ்தான் இலக்குகள், 1971 வங்கதேச விடுதலைப் போரின்போதுகூட தாக்கப்படவில்லை என்பதை அடிக்கோடிட்டார்.
மேலும், `நாங்கள் ஒவ்வொரு ஆயுதத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டோம், அது நமது திட்டமிடுபவர்கள் மற்றும் பணிகளை செய்த நபர்களின் திறனை இது மறைமுகமாக ஒப்புக்கொள்வதாகும்’ என்று அவர் கூறினார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து, மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது.
நான்கு நாள்கள் தீவிரமாக நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து மே 10 அன்று ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டது.