
28 டிசம்பர் 1937-ல் மும்பையில் பிறந்த ரத்தன் டாடா, அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளநிலை கட்டடக்கலை பட்டப்படிப்பை முடித்தார். பிறகு 1961-ல் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் இணைந்த ரத்தன் டாடா, படிப்படியாக உயர்ந்து, தாய் அமைப்பான டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக 1991-ல் பொறுப்பேற்றார்
1991 தொடங்கி 2012 வரை டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பொறுப்பில் செயல்பட்ட ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் டாடா குழுமத்தின் தொழில்கள் விரிவுபடுத்தப்பட்டன.
2012-ல் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், 2016 அக்டோபர் முதல் 2017 ஜனவரி வரை அதன் இடைக்காலத் தலைவராக செயல்பட்டுள்ளார் ரத்தன் டாடா. அதன்பிறகு டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடாவால் கைகாட்டப்பட்டு, இன்று வரை அப்பதவியில் நீடிப்பவர் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன்.
ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ், பிரிட்டனைச் சேர்ந்த கோரஸ் எஃகு நிறுவனத்தையும், சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாக்குவார் லேண்ட் ரோவரையும், முறையே 2007 மற்றும் 2008-ல் டாடா சன்ஸ் குழுமம் கையகப்படுத்தியது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
2009-ல் டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான `டாடா நேனோ’ கார், உலக ஆட்டோமொபைல் நிறுவனங்களை ஆச்சரியப்படுத்தியது. `மக்களின் கார்’ என்கிற வாசகத்துடன் வெளியான டாடா நானோ காரின் விலை ரூ. 1 லட்சமாக (2000 அமெரிக்க டாலர்கள்) நிர்ணயிக்கப்பட்டது.
டாடா நானோ கார் குறித்து அப்போது பேசிய ரத்தன் டாடா, `லட்சக்கணக்கான நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட இந்திய நுகர்வோருக்குப் பாதுகாப்பான மற்றும் மலிவான விலையில் பயணம் மேற்கொள்ள நேனோ உதவும்’ என்றார்.
ரத்தன் டாடாவின் ஆலோசனையின் பேரில், 2021-ல் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை இந்திய அரசிடம் இருந்து வாங்கியது டாடா சன்ஸ் நிறுவனம். இந்த ஏர் இந்தியா நிறுவனம் இந்தியாவின் முதல் வணிக விமான சேவை நிறுவனமாக ஜெ.ஆர்.டி. டாடாவால் 1930-களில் தொடங்கப்பட்டு, 1953-ல் இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்டது.
ஜெ.ஆர்.டி டாடாவால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் தாய் அமைப்புடன் இணைத்த பெருமை ரத்தன் டாடாவையே சேரும்!