
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 5,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:
"புதுச்சேரியில் 48.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மட்டும் 40.1 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்தப் புயல் பாதிப்பு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
புயல் பாதிப்புக்கு நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 5,000 வழங்கப்படும். புயல் பாதிப்பால் சேதமடைந்த பயிர்களுக்காக ஹெக்டர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும். 4 மாடுகள் உயிரிழந்துள்ளன. ஒரு மாட்டுக்கு ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும். 15 கிடாரி கன்றுகள் உயிரிழந்துள்ளன. இதற்கு தலா ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்.
50 படகுகள் சேதமடைந்துள்ளன. இந்தப் படகுகளைப் பழுது நீக்குவதற்காக தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். 15 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒரு குடிசை வீட்டுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும். 10 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்தக் குடிசை வீடுகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும்" என்றார் முதல்வர் ரங்கசாமி.