
மோசமான சாலைகளைப் போடுபவர்கள் பிணையில் வெளிவர முடியாதபடி, சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தில்லியில் தொழில் துறை அமைப்பான சிஐஐ ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நிதின் கட்கரி கூறியதாவது:
"மோசமான சாலைகளைப் போடுவதைப் பிணையில் வெளிவர முடியாத குற்றமாகக் கருத வேண்டும். சாலை ஒப்பந்ததாரர்கள், திட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள் விபத்துகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும்.
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை 2030-ல் அப்படியே பாதியாகக் குறைப்பது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் நோக்கம். 2023 சாலை விபத்துகள் தரவுகளின்படி, நாட்டில் 5 லட்சம் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள்.
உயிரிழந்தவர்களில் 66.4 சதவீதம் அல்லது 1.14 லட்சம் பேர் 18 முதல் 45 வயதுக்குள்பட்டவர்கள். 10 ஆயிரம் பேர் குழந்தைகள். ஹெல்மட் அணியாததாலும், சீட் பெல்ட் அணியாததாலும் 55 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள்" என்றார் நிதின் கட்கரி.