
சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை ஒழுங்குப்படுத்தும் நோக்கிலும், சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையிலும் புதிய பாஸ்டேக் விதிமுறைகள் இன்று (பிப்.17) முதல் அமலுக்கு வந்துள்ளன.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவும், இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை லிமிடெட் நிறுவனமும் இணைந்து சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் மின்னணு முறையில் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக கடந்த 2014-ல் பாஸ்டேக் திட்டத்தை அறிமுகப்படுத்தின.
இந்நிலையில், சுங்கச்சாவடி கட்டண வசூலை ஒழுங்குப்படுத்தும் வகையிலும், மோசடிகளை தடுத்து, தகராறுகளை குறைக்கும் வகையிலும் பாஸ்டேக் பயன்பாட்டில் பல்வேறு முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் இன்று (பிப்.17) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒரு சுங்கச் சாவடியை குறிப்பிட்ட ஒரு வாகனம் கடப்பதற்கு முன்பாக 60 நிமிடங்களும், கடந்த சென்ற பிறகு 10 நிமிடங்களும் பாஸ்டேக் செயலற்ற நிலையில் இருந்தால் அந்தப் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். மேலும், ஒரு சுங்கச்சாவடியை கடந்து செல்லும் நேரத்திலிருந்து 15 நிமிடங்களுக்கும் மேல் அந்த சுங்கப் பரிவர்த்தனை நடைபெற்றால் சம்மந்தப்பட்ட பாஸ்டேக் பயனர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
மேலும், பயணத்திற்கு முன்பு பாஸ்டேக் கணக்கில் போதுமான இருப்புத் தொகையை வைத்திருப்பதை பயனாளர்கள் உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச இருப்பு இல்லாத பயனாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நோக்கில் பாஸ்டேக் கணக்கில் இருந்து கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்.
முன்பு தங்களது பாஸ்டேக்கை சுங்கச்சாவடியில் ரீசார்ஜ் செய்து அதைக் கடந்து செல்லும் வசதி பயனாளர்களுக்கு இருந்தது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்களால் குறைந்தபட்ச இருப்பை பயனாளர்கள் முன்கூட்டியே சரிபார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.