தொகுதி மறுசீரமைப்பு: கேள்வி, பதில்கள்...

மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவது எப்படி?
தொகுதி மறுசீரமைப்பு: கேள்வி, பதில்கள்...
ANI
2 min read

அரசியலமைப்புச் சட்டத்தின் 82-வது பிரிவின்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். இதன்படி 1951, 1961, 1971 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.

1951 மக்கள்தொகை கணக்கெடுப்பு

  • தொகுதிகள் எண்ணிக்கை - 494

  • மக்கள்தொகை - 36.1 கோடி

  • ஒரு தொகுதிக்கு - 7.3 லட்சம் பேர்

1961 மக்கள்தொகை கணக்கெடுப்பு

  • தொகுதிகள் எண்ணிக்கை - 522

  • மக்கள்தொகை - 43.9 கோடி

  • ஒரு தொகுதிக்கு 8.4 லட்சம் பேர்

1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு

  • தொகுதிகள் - 543

  • மக்கள்தொகை - 54.8 கோடி

  • ஒரு தொகுதிக்கு - 10.1 லட்சம் பேர்

1976-ல் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து எடுக்கப்பட்ட முடிவு என்ன?

1976-ல் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரங்கள் மிகத் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இதைத் தீவிரமாகக் கடைபிடித்த மாநிலங்கள், கடைபிடிக்காத மாநிலங்கள் எனும்போது, இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கும்.

எனவே, தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுவதால், குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்தைத் தீவிரமாகக் கடைபிடிக்கும் மாநிலங்கள் தங்களுடையப் பிரதிநிதித்துவத்தை இழந்து பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது. மத்திய அரசின் கொள்கை முடிவை ஏற்று, அதை மிகச் சிறப்பாகக் கடைபிடித்த மாநிலங்கள் பாதிப்படையக் கூடாது என்பதால், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காக, அவசரகாலத்தில் இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சியின்போது அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

2002-ல் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து எடுக்கப்பட்ட முடிவு என்ன?

வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில், அதே காரணத்துக்காக தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவது மேலும் 25 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படுவதாக முடிவெடுக்கப்பட்டு, அரசியலமைப்பில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2026-க்கு பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதிகள் மறுசீரமைக்கப்படலாம் என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

2021-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாதது ஏன்?

மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும். கடைசியாக 2011-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்பிறகு, 2021-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரொனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டம் என்பதால் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியவில்லை. 2022, 2023, 2024, 2025-லும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசால் எடுக்கப்படவில்லை.

தொகுதிகள் மறுசீரமைப்பு மீண்டும் பேசுபொருளானது ஏன்?

புதிய நாடாளுமன்றம் 848 இருக்கைகளுடன் கட்டப்பட்டுள்ளது. தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவதன் மூலம் தொகுதிகளின் எண்ணிக்கை உயரலாம் என்பதைக் கணித்து 848 இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்தது.

அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி, 2026-க்கு பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். எனவே, 2021-ல் எடுக்கப்படாத மக்கள்தொகை கணக்கெடுப்பு 2026-க்குப் பிறகு எடுக்கப்பட்டு தொகுதிகள் மறுசீரமைக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொகுதிகள் மறுசீரமைப்பால் பாதிப்பு என தென் மாநிலங்கள் சொல்வது ஏன்?

தொகுதிகள் மறுசீரமைப்பு என்பது மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்தப்படுவது. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்பு உள்ளது என்பது தென் மாநிலங்களிலிருந்து வரும் குரல்.

தென் மாநிலங்களின் தற்போதைய நிலை என்ன?

  • தெலங்கானா - 17 தொகுதிகள்

  • ஆந்திரப் பிரதேசம் - 25 தொகுதிகள்

  • கேரளம் - 20 தொகுதிகள்

  • தமிழ்நாடு - 39 தொகுதிகள்

  • கர்நாடகம் - 28 தொகுதிகள்

543 தொகுதிகளில் தென் மாநிலங்களின் எண்ணிக்கை - 129 தொகுதிகள்

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் - 24%

தற்போது உள்ள 543 தொகுதிகளில் மாற்றம் செய்யாமல் 543 தொகுதிகளை, மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படும் பட்சத்தில் தென் மாநிலங்கள் சந்திக்கும் இழப்பு என்ன?

தென் மாநிலங்கள்

  • தெலங்கானா - 16 தொகுதிகள் (-1)

  • ஆந்திரப் பிரதேசம் - 22 தொகுதிகள் (-3)

  • கேரளம் - 15 தொகுதிகள் (-5)

  • தமிழ்நாடு - 31 தொகுதிகள் (-7)

  • கர்நாடகம் - 27 தொகுதிகள் (-1)

543 தொகுதிகளில் தென் மாநிலங்களின் எண்ணிக்கை - 111 தொகுதிகள்

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் - 20.44%.

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18%-ல் இருந்து 5.71% ஆக சரியும்.

மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, மக்கள்தொகை 142 கோடியாக இருக்கும்பட்சத்தில், மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 753 ஆக உயர்த்தப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டால்?

  • தெலங்கானா - 20 தொகுதிகள் (+3)

  • ஆந்திரப் பிரதேசம் - 28 தொகுதிகள் (+3)

  • கேரளம் - 19 தொகுதிகள் (-1)

  • தமிழ்நாடு - 41 தொகுதிகள் (+2)?

  • கர்நாடகம் - 36 தொகுதிகள் (+8)

753 தொகுதிகளில் தென் மாநிலங்களின் எண்ணிக்கை - 144 தொகுதிகள்

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் - 19%

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18%-ல் இருந்து 5.4% ஆக சரியும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கின்றன என்பது இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன. தென் மாநிலங்களின் தொகுதிகள் ஒன்றுகூட குறைக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவையில் விளக்கமளித்தார். எனினும், இது எண்ணிக்கை சார்ந்தது அல்ல, பிரதிநிதித்துவ விகிதம் சார்ந்தது என்பது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரல்களாக உள்ளன.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இல்லாமல் வேறு எதன் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு நடத்தப்படும் என்பது மத்திய அரசை நோக்கிய தென் மாநிலங்களின் கேள்வியாக உள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in