பாகிஸ்தானின் பொய் பரப்புரைகள்: முப்படை அதிகாரிகள் விளக்கம்!

இந்தியா எந்தவொரு வழிபாட்டிடத்தையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தவில்லை.
பாகிஸ்தானின் பொய் பரப்புரைகள்: முப்படை அதிகாரிகள் விளக்கம்!
1 min read

பாகிஸ்தான் மேற்கொண்ட பொய் பரப்புரைகள் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் முப்படை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

தில்லியில் இன்று (மே 10) மாலை 6 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, மாலை 5 மணி முதல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மாலை 6.30 மணி அளவில் கமோடர் ரகு நாயர், கர்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது,

`கடந்த சில நாட்களாகவே பல்வேறு போலி செய்திகளைப் பரப்பும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக, நமது எஸ்-400 அழிக்கப்பட்டதாக அவர்கள் கூறிய தகவல் போலியானது. மேலும், ஜே.எஃப். 17 ஜெட் மூலம் அது அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது முற்றிலும் தவறானது.

மேலும், பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பு தாக்கி அழிக்கப்பட்டதாக கூறப்பட்டதும் பொய். ஜம்மு, ஸ்ரீநகர், பதான்கோட், பூஜ் போன்ற விமானப்படைத் தளங்கள் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்ததும் பொய்.

பாகிஸ்தான் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்புகள் தவறாக வழிநடத்தும் வகையில் இருந்தன. மசூதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் திரித்துக்கூறியது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி முப்படைகள் செயல்படுகின்றன. அனைத்து மத வழிபாட்டிடங்கள் மீது நாங்கள் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம்.

தீவிரவாத முகாம்கள் மற்றும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கான உபயோகப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மட்டுமே குறிவைக்கப்பட்டன’ என்றனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in