
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஜெட் விமான எஞ்சின் தயாரிப்புப் பிரிவில் ஆண்டுக்கு ரூ. 72.3 லட்சம் ஊதியம் வழங்கும் பணியில் இணையவுள்ளார் கர்நாடகத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ரிதுபர்ணா.
கர்நாடகத்தின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த சாரேஷ், கீதா தம்பதியரின் மூத்த மகளான ரிதுபர்ணா, தற்போது மங்களூருவில் உள்ள சயாத்ரி பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில், ரோபாடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் பொறியியல் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை பயின்று வருகிறார்.
கல்லூரி படிப்பு குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,
`பள்ளிப்படிப்பிற்குப் பிறகு, மருத்துவராக வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. ஆனால் நீட் தேர்வில் எனக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைக்கவில்லை, பொறியியல் கலந்தாய்வில் 2022-ல் அரசு ஒதுக்கீட்டின் கீழ் எனக்கு இடம் கிடைத்து சயாத்ரி கல்லூரியில் இணைந்தேன். முதலில் மனமுடைந்தாலும், முதல் நாளில் இருந்து எனது தேடுதலைத் தொடங்கினேன்’ என்றார்.
பாக்கு விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகளை ரோபாடிக்ஸை வைத்து தீர்ப்பதை நோக்கமாகக்கொண்டு வடிவமைக்கப்பட்ட அவரது முதல் திட்டத்திற்கு, கோவாவில் நடைபெற்ற புத்தாக்க மாநாட்டில் தங்க மெடலும், வெள்ளி மெடலும் கிடைத்துள்ளன.
கல்லூரி படிப்பிற்கு இடையே பயிற்சியில் ஈடுபட ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை ரிதுபர்ணா அணுகியுள்ளார். ஒரு மாத காலக்கெடுவுக்குள் முடிக்கும்படி குறிப்பிட்டு ஒரு பணியை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ளது. ஆனால் அதை ஒரே வாரத்தில் அவர் முடித்துக் காட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அடுத்த பணி அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதையும் வெற்றிகரமாக முடித்த பிறகு, பல கட்டமாக இணையவழியில் நடைபெற்ற நேர்முக தேர்வில் அவர் கலந்துகொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து, ஆண்டுக்கு ரூ. 72.3 லட்சம் ஊதியம் வழங்கும் பணி ஆணையை அவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிர்வாகம் வழங்கியுள்ளது.
இதன்படி கல்லூரிப் படிப்பு நிறைவுபெற்றதும், அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் எஞ்சின் தயாரிப்புப் பிரிவில் ரிதுபர்ணா பணியில் இணையவுள்ளார்.