பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைப்பது மிகக் கடினம் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
"தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நான் நேற்று பிரசாரம் மேற்கொண்டேன். மோடி மீண்டும் ஆட்சியமைப்பது மிகக் கடினம். தெலங்கானாவில் ஒருபுறம் எனது பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மறுபுறம் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பேசும்போது அவரிடம் தென்படும் கர்வமும் பெருமையும் அங்கு இல்லை.
மத்திய அரசு மீது மக்கள் பெரும் கோபத்தில் உள்ளார்கள். அதிகரிக்கும் வேலையின்மை மற்றும் பணவீக்கமே இந்தப் பெரும் கோபத்துக்குக் காரணம். இந்தச் சுமையிலிருந்து மக்களால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை" என்றார் மல்லிகார்ஜுன கார்கே.
பிஹாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டும் 4-ம் கட்டத் தேர்தலில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் 1 இடத்தில் வென்றது. ராஷ்ட்ரீய ஜனதா தளத்தால் 1 இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.