
1993-ம் ஆண்டில் பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள ராணி வில்லா கிராமத்தைச் சேர்ந்த ஏழு இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான போலி என்கவுன்ட்டர் வழக்கில், முன்னாள் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி.), துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) உள்பட ஓய்வுபெற்ற ஐந்து பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளை குற்றவாளிகள் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிரிமினல் சதி, கொலை, ஆதாரங்களை அழித்தல், மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் ஐவரையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஆகஸ்ட் 4-ல் அறிவிக்கப்படவுள்ளது.
முன்னாள் எஸ்.எஸ்.பி. பூபிந்தர்ஜித் சிங் (61), முன்னாள் டி.எஸ்.பி. டேவிந்தர் சிங் (58), முன்னாள் ஆய்வாளர் சுபா சிங் (83), உதவி சர் ஆய்வாளர்கள் (ஏ.எஸ்.ஐ.க்கள்) குலாபர்க் சிங் (72) மற்றும் ரக்பீர் சிங் (63) ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தீர்ப்பைத் தொடர்ந்து, தற்போது ஐவரும் காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளனர்.
1993-ம் ஆண்டு பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள ராணி வில்லா கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறப்பு காவல்துறை அதிகாரிகள் (எஸ்.பி.ஓ.க்கள்) உள்பட ஏழு இளைஞர்களைக் கடத்தியது, அவர்களை சட்டவிரோதக் காவலில் வைத்தது, சித்திரவதை செய்தது மற்றும் திட்டமிட்டு கொலை (என்கவுன்ட்டர்) செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய வழக்கில் சிறப்பு சி.பி.ஐ. நீதிபதி பால்ஜிந்தர் சிங் சாரா தீர்ப்பு வழங்கினார்.
இந்த போலி என்கவுன்ட்டர் நடவடிக்கை அப்போதைய டி.எஸ்.பி. பூபிந்தர்ஜித் சிங்கின் மேற்பார்வையில் நடைபெற்றதாகவும், பிற குற்றவாளிகள் காவல்துறை குழுவில் இருந்ததாகவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொலைகளை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளாக நியாயப்படுத்த போலியாக ஆதாரங்கள் தயார் செய்யப்பட்டு, ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.