
புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர். ராமசந்திரன் காலமானார்.
1934-ம் வருடம் அன்றைய பிரஞ்சு காலனியாக இருந்த பாண்டிச்சேரியின் மடுகரையில் பிறந்தார் ராமச்சந்திரன். 1969-ம் வருடம் தேர்தல் அரசியலில் நுழைந்த ராமச்சந்திரன் நெட்டப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் அன்றைய முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியாரை தோற்கடித்துத் தன் முதல் அரசியல் வெற்றியை பதிவு செய்தார்.
அதன்பிறகு மண்ணாடிப்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் 1974, 1977 என இரு முறையும், பிறகு திமுக சார்பில் 1980, 1985, 1990 என மூன்று முறையும், பிறகு மீண்டும் அதிமுக சார்பில் 2001-ல் ஒரு முறையும் வெற்றி பெற்று, ஒட்டு மொத்தமாக 8 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார் ராமச்சந்திரன்.
மேலும், திமுக சார்பில் 16 ஜனவரி 1980 முதல் 23 ஜூன் 1983 வரையிலும், பிறகு 8 மார்ச் 1990 முதல் 2 மார்ச் 1991 வரையிலும், இரு முறை புதுச்சேரி முதல்வராகப் பணியாற்றியுள்ளார் ராமச்சந்திரன். 2001 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரஸில் இணைந்து 2001 முதல் 2006 வரை புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராகப் பணியாற்றினார் ராமச்சந்திரன்.
இந்நிலையில், 90 வயதான எம்.டி.ஆர் ராமசந்திரன், வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக் கோளாரால் நேற்று (டிச.8) உயிரிழந்தார். ராமச்சந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அரசு மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.