பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை! | Prajwal Revanna | JDS

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் அபராதத்தை, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா - கோப்புப்படம்
பிரஜ்வல் ரேவண்ணா - கோப்புப்படம்ANI
1 min read

மைசூரூவில் 47 வயது பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை காணொளியில் பதிவு செய்த வழக்கில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகௌடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு இன்று (ஆக. 2) ஆயுள் தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் அபராதத்தை, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இன்று (ஆக. 2) உத்தரவிட்டுள்ளது.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட 14 மாதங்களுக்குள் விசாரணை நிறைவுபெற்று தற்போது தண்டனை விவரங்கள் வெளியாகியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) சைபர் கிரைம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், ரேவண்ணா அந்தப் பெண்ணை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்து, அந்த செயலை காணொளியில் பதிவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டம், 2008-ன் கீழ் பல்வேறு பிரிவுகளில் பிரஜ்வால் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காவல் ஆய்வாளர் ஷோபா தலைமையிலான சிஐடியின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), விசாரணையின்போது 123 ஆதாரங்களை சேகரித்து கிட்டத்தட்ட 2,000 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

குறிப்பாக, இந்த வழக்கு விசாரணையின்போது பாதுகாத்து வைத்திருந்த சேலையை பாதிக்கப்பட்ட பெண் ஆதாரமாக சமர்ப்பித்தார். தடயவியல் பகுப்பாய்வின்போது சேலையில் விந்தணு இருப்பது உறுதி செய்யப்பட்டு, பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றதை நிறுவுவதற்கான முக்கிய ஆதாரமாக அது நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை கடந்த டிசம்பர் 31, 2024 அன்று சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது. அடுத்த 7 மாதங்களில், 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு நேற்று (ஆக. 1) தீர்ப்பு வெளியான நிலையில், தண்டனை விவரங்கள் இன்று (ஆக. 2) வெளியாகியுள்ளன.

ஹாசன் எம்.பி.யாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா, 2024 மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது அவர் படம்பிடித்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்புடைய காணொளிகள் வெளியானதை அடுத்து, அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இருப்பினும், சம்பந்தப்பட்ட காணொளிகள் மார்ஃபிங் செய்யப்பட்டவை என்று கூறி, இது தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா புகாரளித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in