
குஜராத் மாநிலத்திலுள்ள நவாநகர் அரச குடும்பத்தின் புதிய தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய சுதந்திரத்துக்கு முன்பு மன்னராட்சி நிலவும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் அன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவில் இருந்தன. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு 1947-ல் கிடைத்த சுதந்திரத்தின்போது இந்த சமஸ்தானப் பகுதிகளில் நிலவுவந்த மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு அந்தப் பகுதிகள் அனைத்தும் இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டன.
மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டுவிட்டாலும், அந்தந்த சமஸ்தான அரச குடும்பங்களின் தலைவர்கள் இன்னமும் பெயரளவுக்கு பட்டத்துடன் வலம்வருகின்றனர். சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் இருந்த அத்தகைய சமஸ்தானங்களில், குஜராத் மாநிலத்தில் அமைந்திருந்த நவாநகர் சமஸ்தானமும் ஒன்றாகும். நவாநகர் சமஸ்தானம் அமைந்திருக்கும் பகுதி தற்போது ஜாம்நகர் என்று அழைக்கப்படுகிறது.
நவாநகர் அரச குடும்பத்தின் தலைவர் `ஜாம் சாஹேப்’ என்று அழைக்கப்படுகிறார். அதன்படி தற்போதைய நவாநகர் ஜாம் சாஹேப்பாக 85 வயதான திக்விஜய்சிங்ஜி ஜடேஜா உள்ளார். நவாநகரின் புதிய ஜாம் சாஹேப்பை நியமித்து இன்று (அக்.12) அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
`தசரா நாளில் என்னுடைய பிரச்னைகளில் ஒன்றுக்கான தீர்வை நான் கண்டறிந்துவிட்டேன். அஜய் ஜடேஜா என்னுடைய வாரிசாக இருக்க ஒப்புக்கொண்டுவிட்டார். ஜாம்நகரின் மக்களுக்கு சேவை செய்ய அஜய் ஜடேஜா பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பது ஜாம்நகர் மக்களுக்குக் கிடைத்த வரமாகும்’ என்றார்.
1992 முதல் 2000 வரை இந்தியாவுக்காக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 576 ரன்கள் குவித்துள்ளார் அஜய் ஜடேஜா. இதில் 4 அரை சதங்கள் அடக்கம். மேலும் இதே காலகட்டத்தில் 196 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5359 ரன்கள் குவித்துள்ள அஜய் ஜடேஜா 6 சதங்களும், 30 அரை சதங்களும் விளாசியுள்ளார்.