
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சியின் தலைவராக முன்னாள் மத்திய பாதுகாப்பு செயலர் அஜய் குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று (மே 13) இரவு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை (DoPT) அஜய் குமாரின் நியமனம் குறித்து வெளியிட்ட உத்தரவில், `இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 316(1)-ன் கீழ், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (UPSC) தலைவராக முனைவர் அஜய் குமாரை நியமிப்பதில் ஜனாதிபதி மகிழ்ச்சியடைகிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி தலைவர் பொறுப்பை ஏற்கும் நாளில் இருந்து, அவரது பதவிக்காலம் தொடங்கும் என்று மேற்கூறிய உத்தரவில் டிஓபிடி கூறியுள்ளது. யுபிஎஸ்சி தலைவராக இருந்த பிரீத்தி சுதன் கடந்த ஏப்.29-ல் ஓய்வுபெற்ற பிறகு, 40 நாள்களுக்கும் மேலாக அப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், அஜய் குமார் யுபிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஐடி கான்பூரில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்ற அஜய் குமார், 1985-ல் கேரள பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கேரள அரசிலும், மத்திய அரசிலும் பல்வேறு முக்கியப் பதவிகளில் பணியாற்றியுள்ளார். கடந்த 2015 முதல் 2019 வரை, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலராக பணியாற்றினார்.
இதைத் தொடர்ந்து, 23 ஆகஸ்ட் 2019 முதல் 31 அக்டோபர் 2022 வரை மத்திய பாதுகாப்பு செயலராகப் பணியாற்றினார். இவரது பதவிக் காலத்தில் அக்னிவீர் திட்டம் உருவாக்கம், முப்படைகளின் தலைவர் பதவி உருவாக்கம் மற்றும் ஆயுதத் தொழிற்சாலைகளை தனியார்மயமாக்குதல் போன்ற பாதுகாப்பு அமைச்சகம் சார்ந்த முக்கிய சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன.