
ஆந்திரப் பிரதேசத்தில் தொண்டர் ஒருவர் காரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒய்எஸ்ஆர்சிபி கட்சித் தொண்டர் ஒருவர் கடந்தாண்டு தற்கொலை செய்துகொண்டார். இவருடைய குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குண்டூரிலுள்ள தொண்டரின் வீட்டுக்குச் சென்றார். ஜெகன் மோகன் ரெட்டியின் காருடன் மூன்று கார்கள் செல்ல மட்டுமே காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆஞ்சநேய சுவாமி சிலை இருக்கும் இடத்தைச் சென்றடைந்தவுடன், சாலையில் ஒருவர் பலத்த காயமடைந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.
காயமடைந்தவர் 53 வயது சீலி சிங்கையா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குண்டூர் காவல் காண்காணிப்பாளர் சதீஷ் குமார் கூறுகையில், "முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் வாகனத்தில் சிக்கி சிங்கையா உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதற்கேற்ப குற்றப்பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன. கார் ஓட்டுனர் ரமண ரெட்டி, ஜெகன் மோகன் ரெட்டி, முன்னாள் எம்.பி. சுப்பாரெட்டி, முன்னாள் அமைச்சர்கள் விடாடலா ராஜானி மற்றும் பெர்னி நானி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
முன்பு, ரமண ரெட்டியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போது, வாகனத்தின் அடியில் சிங்கையா சிக்கிக்கொண்ட பிறகும் கான்வாயை நிறுத்தாமல் சென்றது ஏன் என காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.