உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், `குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற நபராகவே இருந்தாலும் அவருக்குச் சொந்தமான கட்டடங்களை இடித்துத் தள்ளிவிட முடியாது’ என்று கருத்து தெரிவித்துள்ளது நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோரைக் கொண்ட அமர்வு.
`வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களை இடிக்க புல்டோசர்களை உபயோகித்து மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறைப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படும்’ என்றும் அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
புல்டோசர்களை உபயோகித்துத் தீவிரமான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளை இடிக்கும் வழக்கத்தை உ.பி. போன்ற மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. இதற்கு புல்டோசர் நீதி என பெயரிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை இன்று மேற்கொண்டது உச்ச நீதிமன்றம்.
மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, `இந்த புல்டோசர் நீதி நாடு முழுவதும் நடைபெறாதவாறு உச்ச நீதிமன்றம் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்’ என வாதிட்டார். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, `இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு முன் தவறான முறையில் காண்பிக்கப்படுகிறது’ என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், `பொது இடங்களை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் கோவிலாகவே இருந்தாலும் அதற்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது. ஆனால் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற நபராகவே இருந்தாலும் சட்டப்படி விதிமுறைகளைப் பின்பற்றாமல் அவர்களுக்குச் சொந்தமான கட்டடங்களை இடிக்கக்கூடாது.
முதலில் நோட்டீஸ் பிறப்பித்து, பதிலளிக்க அவகாசம் தர வேண்டும். சட்டப்படி விஷயத்தை அணுக அவகாசம் தர வேண்டும். அதற்குப் பிறகுதான் கட்டடத்தை இடிக்க வேண்டும். புல்டோசர்களை உபயோகித்து கட்டடங்களை இடிக்கும் நடவடிக்கைகளை நாடு முழுவதும் முறைப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படும்’ என்றனர்.