கொல்கத்தா உயர் நீதிமன்றம்
கொல்கத்தா உயர் நீதிமன்றம்ANI

1% உண்மையாக இருந்தாலும், அது வெட்கத்துக்குரியது: சந்தேஷ்காளி வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் கருத்து

"ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆட்சி நிர்வாகம் இதற்குத் தார்மீகப் பொறுப்பை ஏற்க வேண்டும்."
Published on

சந்தேஷ்காளி வன்முறை வழக்கில் ஒரு சதவீதம் உண்மை இருந்தாலும் அது வெட்கத்துக்குரியது எனக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சந்தேஷ்காளி பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் நில அபகரிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வந்ததாக, அந்தப் பகுதியிலிருந்த ஏராளமான பெண்கள் குற்றம்சாட்டினார்கள். ரேஷன் பொருள் முறைகேடு வழக்கு தொடர்பாக இவரது இல்லத்தில் சோதனை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றபோது, அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்கள். ஷேக் ஷாஜகான் தற்போது அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிராக வன்முறை மற்றும் நிலஅபகரிப்பு தொடர்பாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் சிவஞானம் தலைமையிலான அமர்வு இதை விசாரிக்கிறது.

தலைமை நீதிபதி டிஎஸ் சிவஞானம் கூறுகையில், "ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆட்சி நிர்வாகம் இதற்குத் தார்மீகப் பொறுப்பை ஏற்க வேண்டும். வழக்கில் ஒரு சதவீதம் உண்மை இருந்தாலும்கூட, அது முற்றிலும் வெட்கத்துக்குரியது. மேற்கு வங்கம் பெண்களுக்குப் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறதல்லவா?. இதில் ஒரு மனு உண்மை என்று நிரூபனமானால்கூட இந்தப் பெயர் அனைத்தும் சரிந்துவிடும்" என்றார்.

அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கு விசாரணை மற்றும் ஷாஜகான் ஷேக்கின் காவலை சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட ஷாஜகான் ஷேக், மார்ச் 6 முதல் சிபிஐ காவலில் உள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in