
பிஎஃப் பணத்தை முழுமையாக எடுக்க விதிகளில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பணியாளர்கள் தங்களுடைய பிஎஃப் பணத்தை எடுப்பதில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) குறிப்பிடத்தக்க சில மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய விதிப்படி, பிஎஃப் பணத்தை முழுமையாக எடுக்க இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. 58 வயதில் பணி ஓய்வு பெறும் வரை பிஎஃப் பணத்தை முழுமையாக எடுக்க முடியாது. எனவே, பிஎஃப் பணத்தை முழுமையாக எடுக்க 58 வயது வரை காத்திருக்க வேண்டும்.
அல்லது, வேலையை விட்ட பிறகு இரு மாதங்களுக்கு வேலை இல்லாமல் இருக்க வேண்டும். இவ்விரு காலகட்டங்களில் மட்டுமே பிஎஃப் பணத்தை பணியாளர் ஒருவரால் முழுமையாக எடுக்க முடியும்.
தற்போது கொண்டு வரப்படவுள்ள புதிய மாற்றத்தின்படி, பணியாளர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிஎஃப் பணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவோ எடுத்துக்கொள்ளலாம். ஒரு வேளை இந்த விதிகளில் திருத்தம் மேற்கொண்டு இப்புதிய நடைமுறையைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தால், அமைப்பு சார்ந்த துறையில் உள்ள 7 கோடி உறுப்பினர்கள் பயனடைவார்கள்.
மத்திய அரசு மற்றும் இபிஎஃப்ஓ அண்மைக் காலமாக பணியாளர்களுக்கான நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் பல்வேறு விதிகளைத் தளர்த்தி வருகின்றன. பணியாளர்கள் அவசர காலத்தில் தங்களுடைய பிஎஃப் கணக்கிலிருந்து யுபிஐ அல்லது ஏடிஎம் மூலம் ரூ. 1 லட்சம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் எனும் மாற்றம் நடைமுறையில் உள்ளது.
EPFO | PF | Provident Fund | Employee's Provident Fund