
வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) கணக்கில் இருந்து, தானியங்கி முறையில் முன்பணம் எடுக்கும் வரம்பு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக, மத்திய தொழிலாளர் நல மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று (ஜூன் 24) தகவலளித்துள்ளார்.
தற்போது, மூன்று நாள்கள் காலக்கெடுவுடன் கூடிய தானியங்கி முறையில் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து முன்பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.1 லட்சமாக உள்ளது.
மத்திய அமைச்சரின் அறிவிப்பின் மூலம், வருங்கால வைப்பு நிதியின் உறுப்பினர்கள் இனி மூன்று நாள்கள் காலக்கெடுவுக்குள் ரூ. 5 லட்சம் வரை தானியங்கி முறையில் முன்பணம் எடுக்க முடியும். இந்த புதிய நடைமுறை, அவசர காலங்களில் பணம் தேவைப்படும் லட்சக்கணக்கான பி.எஃப். உறுப்பினர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
2020 கோவிட் பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு தனிப்பட்ட வகையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், முதல்முறையாக பி.எஃப். கணக்கில் இருந்து தானியங்கி முறையில் முன்பணம் எடுப்பதற்காக நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்பிறகு மருத்துவ சிகிச்சை, கல்வி, திருமணம், வீடு கட்டுமானம் போன்ற காரணங்களுக்காக பி.எஃப். கணக்கில் இருந்து முன்பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. மனித ஈடுபாடு இல்லாமல் முன்பணம் எடுப்பதற்கான இந்த நடவடிக்கை பி.எஃப். உறுப்பினர்களுக்கு இடையே பெறும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது ரூ. 5 லட்சமாக வரம்பு உயர்த்தப்பட்ட அறிவிப்பும் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 2.5 மாதங்களில், தானியங்கி முறையில் முன்பணம் எடுப்பதற்கான 76.52 லட்சம் கோரிக்கைகளுக்கு வருங்கால வைப்பு நிதி ஒப்புதல் அளித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக கடந்த 2020-ல் இருந்து செயல்படுத்தப்பட்டு வரும் தானியங்கி ரீதியிலான முன்பணம் எடுக்கும் நடைமுறையின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில், இது 70 சதவீதமாகும்.