
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் புரவலர்-இயக்குநர் அனில் அம்பானியை, `மோசடிக்குரிய நிறுவனம் மற்றும் மோசடி நபர்’ என்று ஸ்டேட் பாங்க் (எஸ்பிஐ) வகைப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, அனில் அம்பானியுடன் தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறை இன்று (ஜூலை 24) சோதனை நடத்தி வருகிறது
அம்பானியின் தனிப்பட்ட இல்லத்தில் சோதனை நடைபெறவில்லை என்றாலும், தில்லி மற்றும் மும்பையில் உள்ள அமலாகத்துறை குழுக்கள் சார்பில் அவரது ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்துடன் (RAAGA) தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
பணமோசடி குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
தேசிய வீட்டுவசதி வங்கி, இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, தேசிய நிதி அறிக்கை ஆணையம் (NFRA), பாங்க் ஆஃப் பரோடா வங்கி உள்ளிட்ட பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் நிதி அமைப்புகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் சிபிஐ பதிவுசெய்த இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.
இந்த விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக அனில் அம்பானி குழுமத்துடன் தொடர்புடைய மூத்த நிர்வாகிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
பொது நிதியை வேறு செயல்களுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், வங்கிகள், பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொது நிறுவனங்கள் உள்பட பலர் இந்த செயல்பாட்டில் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம் அல்லது ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
2017 முதல் 2019 வரை யெஸ் வங்கியில் இருந்து பெறப்பட்ட ரூ. 3,000 கோடி அளவுக்கான கடன்களை சட்டவிரோதமாக வகையில் வேறு செயல்பாடுகளுக்கு உபயோகித்ததாக சந்தேகிக்கப்படும் விவகாரத்தில் இந்த விசாரணை கவனம் செலுத்துகிறது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்கப்படுவதற்கு முன்பு, யெஸ் வங்கியின் புரவலர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு நிதி அளிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.