
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஜவஹர்லால் நேருவால் கடந்த 1937-ல் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஐர்னல்ஸ் நிறுவனத்தின் சார்பில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். கடந்த 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வெளியீடு முடிவுக்கு வந்தது.
அச்சமயம், அசோசியேட்டட் ஐர்னல்ஸ் நிறுவனம் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 90 கோடி கடன்பட்டிருந்தது. அப்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக இருந்த `யங் இந்தியா’ நிறுவனம், ரூ. 50 லட்சத்தை செலுத்தி அசோசியேட்டட் ஐர்னல்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. அசோசியேட்டட் ஐர்னல்ஸ் நிறுவனம் செலுத்தவேண்டிய மீதமுள்ள ரூ. 89.50 கோடி கடனை காங்கிரஸ் கட்சி ரத்து செய்தது.
இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கையின் விளைவாக, அசோசியேட்டட் ஐர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ. 2,000 கோடி சொத்துகளை `யங் இந்தியா’ நிறுவனம் முறைகேடாக அபகரித்திருப்பதாக குற்றம்சாட்டி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணையில் கடந்த 2014-ல் தில்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், இந்த விவகாரம் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணை 2021-ல் தொடங்கியது. இந்நிலையில், தற்போது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், இவர்கள் இருவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். வரும் ஏப்ரல் 25-ல் இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கவுள்ளது.
இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக, ரூ. 661 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை சார்பில் கடந்த ஏப்.12 அன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸின் அடிப்படையில் தில்லி, மும்பை, லக்னோவில் உள்ள சொத்துகள் முடக்கப்பட உள்ளன.