
Betting App Scam: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சைபராபாத் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் (FIR) அடிப்படையில், மோசடி சூதாட்ட தளங்களின் விளம்பரங்களில் தோன்றியதற்காக, விஜய் தேவரகொண்டா போன்ற திரைத்துறை பிரபலங்கள் உள்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, மஞ்சு லட்சுமி, பிரகாஷ் ராஜ், நிதி அகர்வால், அனன்யா நாகல்லா மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஸ்ரீமுகி ஆகிய முக்கிய நடிகர்களின் பெயர்கள் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளன.
இந்தியா டுடே ஊடகத்திற்குக் கிடைத்த முதல் தகவல் அறிக்கையின்படி, நடிகர்கள் மற்றும் மீடியா இன்ஃப்ளுயன்ஸர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 49 உடன் சேர்த்து படிக்கப்படும் பிரிவுகள் 318(4) மற்றும் 112, தெலுங்கானா மாநில கேமிங் சட்டம் பிரிவு 4 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66-டி ஆகியவற்றின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மோசடி செயல்பாடுகள், சட்டவிரோத கேமிங்கை ஊக்குவித்தல் மற்றும் இணைய மோசடி ஆகிய குற்றங்களை இந்த சட்டப் பிரிவுகள் கையாள்கின்றன.
ராணா டகுபதி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் ஜங்லி ரம்மியின் விளம்பரத்துடன் தொடர்புடையவர்கள் என்றும், விஜய் தேவரகொண்டா A23 உடனும், மஞ்சு லட்சுமி யோலோ 247 உடனும், பிரணீதா ஃபேர்பிளேயுடனும் மற்றும் நிதி அகர்வால் ஜீத் வின் உடனும் தொடர்புடையவர்கள் என்றும் முதல் தகவல் அறிவிக்கை குறிப்பிடுகிறது.
இத்தகைய சூதாட்ட மோசடி தளங்கள் மற்றும் செயலிகளை விளம்பரங்கள் மூலம் ஊக்குவித்ததாக நடிகர்கள் மற்றும் மீடியா இன்ஃப்ளுயன்ஸர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான தனது நிலைப்பாட்டை விளக்கும் விதமாக, தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்ட பிரகாஷ் ராஜ், 2016-ல் ஒரு கேமிங் செயலியை விளம்பரப்படுத்தியதாகவும், ஆனால் அது பொருத்தமற்றது என்பதை உணர்ந்த பிறகு 2017-ல் அதில் இருந்து பின்வாங்கியதாகவும் கூறினார்.
`அப்போதிருந்து, நான் எந்த கேமிங் செயலிகளையும் விளம்பரப்படுத்தவில்லை, காவல்துறையினர் அணுகினால் பதிலளிப்பேன்’ என்றும் அவர் கூறினார்.