ஜூலை 1 முதல் அரசு அதிகாரிகளே மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்: அசாம் முதல்வர்

அசாமில் அரசு அலுவலகங்களில் இரவு 8 மணிக்கு தாமாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் திட்டம் அறிமுகம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அசாமில் அரசு அதிகாரிகளே அவர்களுடைய மின் கட்டணத்தைச் செலுத்துவார்கள் என அந்த மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

அசாமில் மின்சாரத்தை சேமிப்பதற்காக அந்த மாநில அரசு பல்வேறு முன்னெடுப்புகளுக்குத் திட்டமிட்டுள்ளது. முதல்வர் அலுவலகம், தலைமைச் செயலகம், உள்துறை மற்றும் நிதித் துறை தவிர்த்து மற்ற அனைத்து அரசு அலுவலகங்களிலும் இரவு 8 மணிக்கு தாமாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக அந்த மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். மின் நுகர்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 8 ஆயிரம் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் இதர நிறுவனங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து அரசு கட்டடங்களும் சூரிய சக்தி மூலம் இயங்குவதை நோக்கமாகக் கொண்டு படிப்படியாக செயல்படுத்தி வர அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மின் சேமிப்பின் ஒரு பகுதியாக, அரசு அதிகாரிகளின் மின் கட்டணம் மக்களின் வரிப் பணம் மூலம் செலுத்தப்படாது என்பதையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

"மக்களின் வரிப் பணத்தில் அரசு அதிகாரிகளின் மின் கட்டணம் செலுத்தப்படும் விஐபி கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவுள்ளோம். நானும், தலைமைச் செயலரும் இதற்கு முன்னுதாரணமாகத் திகழ ஜூலை 1 முதல் எங்களுடைய மின் கட்டணத்தை நாங்களே செலுத்தவுள்ளோம். ஜூலை தொடக்கம் முதல் அனைத்து அரசு அதிகாரிகளும் அவரவர் மின் கட்டணத்தை அவரவர் செலுத்த வேண்டும்" என்று எக்ஸ் தளப் பக்கத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in