
உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான பேலா எம். திரிவேதி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அவரது கடைசி வேலை நாளான இன்று (மே 16) பிரிவு உபசார விழா நடைபெற்றது.
1995-ல் குஜராத் மாநிலத்தில் விசாரணை நீதிமன்ற நீதிபதியாக பணிபுரியத் தொடங்கிய பேலா திரிவேதி, ஆகஸ்ட் 31, 2021 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். அதே நாளில், தில்லியைச் சேர்ந்த ஹிமா கோலியும், கர்நாடகத்தைச் சேர்ந்த பி.வி. நாகரத்னாவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் 11-வது பெண் நீதிபதி என்ற பெருமையை பேலா திரிவேதி பெற்றார். மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதியாகப் பணியாற்றிய நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தன் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதாக செய்தி வெளியானது.
இதன்மூலம் உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக பெண் நீதிபதி ஒருவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வரும் ஜூன் 9-ல் பேலா திரிவேதி பணி ஓய்வுபெறவுள்ள நிலையில், 3 வாரங்களுக்கு முன்பாக தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதை ஒட்டி, பேலா திரிவேதியின் கடைசி வேலை நாளான இன்று (மே 16) உச்ச நீதிமன்றத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இதில் பேசிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், `நீதிபதி பேலா எம்.திரிவேதி நியாயமானவர், கடின உழைப்பு மற்றும் நேர்மைக்கு பேர் போனவர். நமது நீதித்துறைக்கு நீங்கள் ஒரு மதிப்புமிக்க சொத்தாக இருந்திருக்கிறீர்கள். புதிய பயணத்தைத் தொடங்கவுள்ள உங்களுக்கு வாழ்த்துகள்’ என்றார்.
10 ஜூன், 1960 அன்று வடக்கு குஜராத்தின் பாட்டனில் பிறந்த பேலா திரிவேதி, சட்டப்படிப்பை முடித்தபிறகு குஜராத் உயர் நீதிமன்றத்தில் சுமார் 10 ஆண்டு காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர், 1995-ல் அஹமதாபாத்தில் உள்ள நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அப்போது அவரது தந்தையும் நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்த நிலையில், `தந்தை - மகள் இருவரும் ஒரே நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பதவி வகித்தார்கள்’ என்று லிம்கா புக் ஆஃப் இந்தியன் ரெக்கார்ட்ஸ் 1996 பதிப்பில் பதிவு செய்யப்பட்டது.