தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் தேர்தல், ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் 2024
மக்களவைத் தேர்தல் 2024ANI

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

17-வது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜுன் 16-ல் நிறைவடைகிறது. இந்நிலையில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டு முதலே இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்ட நிலையில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க தமிழ்நாடு உள்பட 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இடைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளன.

தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஜூன் 4- ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மார்ச் 20-ல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 27-ல் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 28-ல் வேட்புமனு பரிசீலனையும், மார்ச் 30-ல் வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 96.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளார்கள். 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

மொத்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி. பெண் வாக்காளர்கள் 47.1 கோடி. 1.82 கோடி பேர் முதன்முறையாக வாக்களிக்கவுள்ளவர்கள். 20 முதல் 29 வயதில் 19.47 கோடி வாக்காளர்கள் உள்ளார்கள்.

மக்களவைத் தேர்தல் தேதிகளை வெளியிட தில்லியிலுள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்தல் துணை ஆணையர்களுடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

இந்த அறிவிப்பின்போது ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in