
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11.30 மணி நிலவரப்படி பாஜக 48-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் பாஜக ஆட்சியைத் தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.
90 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஹரியாணாவுக்கு அக்டோபர் 5-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 1,031 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் மொத்தம் 67.9 சதவீத வாக்குகள் பதிவாகின. ஹரியாணாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக கடுமையாக முயற்சித்தது.
10 ஆண்டுகால பாஜக ஆட்சியை அகற்ற காங்கிரஸ் திட்டமிட்டு பணியாற்றியது. ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசித்து பிறகு கூட்டணியை முன்னெடுக்கவில்லை. ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட்டது. இந்திய தேசிய லோக் தளம் - பகுஜன் சமாஜ் - ஷிரோமனி அகாலி தளம், ஜனநாயக ஜனதா கட்சி - ஆசாத் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளும் முக்கியப் போட்டியில் இருந்தன.
வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பதாகவே கருதியிருந்தன.
இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆட்சிப் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், காலை 9.30 மணியளவில் என்டிடிவி செய்தி நிறுவனத்தின்படி 89 தொகுதிகள் முன்னிலை நிலவரப்படி காங்கிரஸ் 53 இடங்களிலும் பாஜக 30 இடங்களிலும் இந்திய தேசிய லோக் தளம் 3 இடங்களிலும் முன்னிலை வகித்தன.
ஆனால் ஒரு மணி நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறி 45-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணி வகித்து வருகிறது பாஜக. அதே நேரம் 35 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
முதல்வர் நாயப் சிங் சைனி லத்வா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர்கள் வினேஷ் போகாட் மற்றும் பூபீந்தர் சிங் ஹூடா பின்னடைவை சந்தித்துள்ளனர்.
2019 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றன.